ஷா ஆலம், ஜூன் 19: சிலாங்கூரின் பொருளாதார ஆற்றலை வலுப்படுத்தும் திட்டத்தின் 2-ஆம் கட்டத்தின் கீழ், 2,469 விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு மொத்தம் 6 மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதியுதவி வழங்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் கால்நடை தீவனம், உரம், எரிபொருள் பற்றுச்சீட்டு (Voucher) ஆகியவை வழங்கப்படும் அல்லது அறுவடை காலம் மற்றும் மாதாந்திர தேவைகளின் அடிப்படையில் RM300 முதல் RM600 வரை பண உதவி அளிக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"மக்களிடமிருந்து பெறப்பட்ட கூடுதல் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, 2,469 விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு இந்த உதவியை வழங்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தற்பொழுது வெற்றிகரமாக அமலாக்கத்தில் இருக்கும் முதற்கட்டத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் விவசாய உதவிகளுக்குக் கூடுதலாகவே இந்த புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெளிவுபடுத்தினார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட முதலாம் கட்டத் திட்டத்தின் கீழ், வேளாண் துறைக்கு ஆதரவாக RM25 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் மொத்தம் 16,395 பயனாளர்கள் நன்மை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் மற்றும் வேளாண் உள்ளீட்டு உதவிகள் மூலம் உணவு உற்பத்தியாளர்களின் உற்பத்திச் செலவைக் குறைப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். மாநிலத்தின் நெல் விவசாயிகள், பயிர் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்பு (Aquaculture) தொழில்முனைவோர் ஆகியோர் இதன் மூலம் பயனடைகின்றனர்.
மாநிலத்தில் உணவு உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெறவும், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்த உதவிகள் ரொக்கப் பணமாகவும், எரிபொருள் பற்றுச்சீட்டுகள், வேளாண் உள்ளீடுகள் மற்றும் கால்நடை தீவனங்கள் போன்ற வடிவங்களில் விநியோகிக்கப்படுகின்றன.
உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் எரிசக்தி சந்தையின் நிச்சயமற்ற நிலை காரணமாக ஏற்பட்டுள்ள விலை உயர்வைச் சமாளிக்க, மக்களுக்கும் வணிகத் துறைக்கும் உதவும் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.







