ஷா ஆலாம், ஜூலை 18: சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் (PBT) வளாகங்களை வாடகைக்கு எடுத்துள்ள தகுதியுடைய வணிகர்கள், தங்களின் மாதாந்திர வாடகையில் 30 விழுக்காடு தள்ளுபடியை இந்த ஜூலை மாதம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை தானியங்கி முறையில் (Automatic) பெறவுள்ளனர்.
இந்த திட்டம் 21,234 வணிகர்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் என டத்தோ மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இந்த வாடகைக் குறைப்பின் மூலம் வணிகர்கள் சேமிக்கும் கூடுதல் பணத்தை, தங்களது வணிகத்திற்கான சுழற்சி மூலதனமாகவோ அல்லது இதர வணிகச் செலவினங்களை ஈடுகட்டவோ பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
சேமிக்கப்படும் ஒவ்வொரு ரிங்கிட்டும் வணிகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கும், தொழிலாளர்கள் தடையின்றி ஊதியம் பெறுவதற்கும், அவர்களின் குடும்பங்கள் நல்வாழ்வுடன் வாழ்வதற்கும் ஒரு கூடுதல் உந்துசக்தியாக அமையும்.
கடந்த ஜூன் 19ஆம் தேதி சிலாங்கூரின் பொருளாதரத்தை வலுப்படுத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அறிவித்த அமிருடின் ஷாரி, வணிகர்களிடமிருந்து எந்தவொரு விண்ணப்பமும் இன்றி இந்த உதவியைத் தானியங்கி முறையில் வழங்குவதற்காக மாநில அரசு 45 லட்சம் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
உலகளாவிய சந்தை விநியோகத் தடை மற்றும் எரிசக்தி சந்தையின் நிச்சயமற்ற தன்மையால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு சவால்களை மக்கள் மற்றும் வணிகத் துறையினர் எதிர்கொள்ள உதவும் வகையில், சிலாங்கூர் மாநில அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.







