ஷா ஆலம், ஜூன் 16 – சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள முஸ்லிம் அல்லாதார் வழிபாட்டுத் தலங்களுக்கான (RIBI) வழிகாட்டி நெறிமுறைகளில் ஏதேனும் மேம்பாடுகள் தேவைப்பட்டால், அதனை எவ்வித அரசியல் நோக்கமும் இன்றி பொறுப்புணர்வுடன் மறுஆய்வு செய்வதற்குச் சிலாங்கூர் மாநில அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சிலாங்கூர் மாநில பௌத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோ மதங்களுக்கான சிறப்புக் குழுவின் (LIMAS) இணைத் தலைவர் பப்பாராய்டு வீரமன் விடுத்துள்ள அறிக்கையில், தற்போதைய சூழல் மற்றும் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப இந்த வழிகாட்டி நெறிமுறைகள் பொருத்தமாக இருப்பதை உறுதி செய்ய மாநில அரசு விரும்பினால், அதனை மறுஆய்வு செய்வதில் தமக்கு தனிப்பட்ட முறையில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலக் கொள்கைகள் தொடர்ந்து திறம்படச் செயல்படுவதை உறுதி செய்வதற்காக அவை அவ்வப்போது மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
அதே வேளையில், மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் தலைமையின் கீழ், கொண்டு வரப்படும் எந்தவொரு திருத்த முன்மொழிவுகளும் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும், சிலாங்கூரின் பல்லின சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டு அவை கவனமாகப் பரிசீலிக்கப்படும் என்றும் பாப்பாராய்டு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "மதங்களுக்கு இடையிலும் இனங்களுக்கு இடையிலும் நிலவும் நல்லிணக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய, அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் செவிமடுத்துக் கேட்க மாநில அரசு எப்போதும் தயாராகவே உள்ளது. இருப்பினும், மேம்பாட்டிற்கான எந்தவொரு ஆலோசனையும் பொறுப்புணர்வுடனும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்க வேண்டுமே தவிர, வெறும் அரசியல் நலன்களுக்காக மட்டுமே தூண்டப்பட்டதாக இருக்கக் கூடாது," என அவர் வலியுறுத்தினார்.
கடந்த 2005ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த RIBI வழிகாட்டி நெறிமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் எனப் பல தரப்பிலிருந்து எழுந்துள்ள கோரிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாப்பாராய்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதோடு, இக்கோரிக்கையை இப்போது எழுப்புபவர்கள், அவர்கள் மாநில அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருந்தபோது ஏன் இந்த விவகாரத்தைக் கொண்டு வரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"இந்த வழிகாட்டி நெறிமுறைகள் உண்மையிலேயே சிக்கலானவை என்றோ அல்லது தற்போதைய காலத்திற்குப் பொருந்தாதவை என்றோ கருதப்பட்டால், முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் தங்களுக்கு வாய்ப்பும் அதிகாரமும் இருந்த காலக்கட்டத்தில் ஏன் இதனை ஒரு விரிவான மறுஆய்வுக்கு உட்படுத்தவில்லை என்பதற்கு முதலில் விளக்கமளிக்க வேண்டும்," என்று அவர் சாடினார்.
மேலும், சிலாங்கூரின் பன்முக கலாச்சார சமூகத்தின் அடித்தளமாக விளங்கும் பரஸ்பர மரியாதை மற்றும் உண்மைகளின் அடிப்படையில் மட்டுமே இது குறித்த விவாதங்கள் அமைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த ஜூன் 6ஆம் தேதியன்று இந்த RIBI வழிகாட்டி நெறிமுறைகள் குறித்துப் பொதுமக்களிடையே நிலவி வந்த சில தவறான புரிதல்களுக்குப் பாப்பாராய்டு தெளிவுபடுத்தியிருந்தார். குறிப்பாக, முக்கியச் சாலைகளில் இருந்து முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களுக்கு நேரடி அணுகல் (Direct Access) இனி அனுமதிக்கப்படாது என்று கூறப்படும் புகார்கள் முற்றிலும் உண்மையற்றவை என்று அவர் கூறினார்.
போக்குவரத்து மேலாண்மை மற்றும் பொதுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மட்டுமே சேவைச் சாலைகள் (Service Roads) அமைப்பதற்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்று அவர் விளக்கினார்.
"முக்கியச் சாலைகளில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களில் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு வழிபாட்டுக் காலங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதால், போக்குவரத்து நெரிசலும் பாதுகாப்பு அபாயங்களும் ஏற்படுகின்றன. அதனைத் தவிர்க்கவே இந்த விதிமுறைகள்," என்றார்.
அதே வேளையில், கட்டுமானத் தளங்களில் உள்ள வழிபாட்டுச் சின்னங்கள் அல்லது பீடங்கள் இடிக்கப்படும் என்ற வதந்திகளையும் பப்பாராய்டு மறுத்தார். மேம்பாட்டுப் பணிகளின் போது தற்காலிகமாகப் பயன்படுத்தப்படும் கட்டமைப்புகளுக்கு மட்டுமே இந்த வழிகாட்டி நெறிமுறைகள் பொருந்தும் என்றும், நிரந்தர வழிபாட்டுத் தலங்கள் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அவை இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே விதிமுறை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
முஸ்லிம் அல்லாதார் வழிபாட்டுத் தலங்களுக்கான இந்தத் திட்டமிடல் வழிகாட்டி நெறிமுறைகள் அனைத்தும் மதச் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதோடு, முறையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட மேம்பாட்டை உறுதி செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதால், பொதுமக்கள் தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.







