புதிய சீர்திருத்தங்கள் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பாலஸ்தீனம்; அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல்

15 ஜூன் 2026, 6:38 AM
புதிய சீர்திருத்தங்கள் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பாலஸ்தீனம்; அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல்

ராமல்லா, ஜூன் 15 – பாலஸ்தீனத்தில் ஜனநாயக செயல்முறைகளை மேம்படுத்துவதற்கும், பாலஸ்தீன அரசு மற்றும் பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) ஆகியவற்றின் நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதற்குமான ஒரு விரிவான திட்ட வரைபடத்தின் ஒரு பகுதியாக, எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் மஹ்மூட் அப்பாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அரசியல் பங்களிப்பை அதிகரிப்பது மற்றும் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர் தேர்தல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் வகையில், 2007 ஆண்டின் பொதுத் தேர்தல்கள் மீதான சட்ட ஆணை எண் ஒன்றில் திருத்தங்களை மேற்கொண்டு அதிபர் அப்பாஸ் புதிய சட்ட ஆணையை பிறப்பித்துள்ளதாக வாஃபா (WAFA) நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத் திருத்தத்தின் மூலம், பாலஸ்தீன நாடாளுமன்றத்தின் (Palestinian Legislative Council) இடங்களின் எண்ணிக்கை 200ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்றத்தில் இடங்களைப் பெறுவதற்கான தேர்தல் வரம்பு (Electoral Threshold) ஒரு விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு தேர்தல் வேட்பாளர் பட்டியலிலும் இருக்க வேண்டிய குறைந்தபட்ச வேட்பாளர்களின் எண்ணிக்கை 16லிருந்து 20ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்களின் பரந்த பிரதிநிதித்துவத்தையும், அவர்களின் அதிகப்படியான பங்களிப்பையும் உறுதி செய்யும் வகையில் தேர்தல் பட்டியலில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் புதிய நடைமுறைகளும் இச்சட்ட ஆணையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, வேட்பாளர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு மூன்று வேட்பாளர்களிலும் குறைந்தது ஒரு பெண் வேட்பாளர் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 28லிருந்து 23ஆகப் புதிய ஆணை மாற்றியுள்ளது.

இந்த அதிரடி மாற்றத்தின் மூலம், ஜனநாயகச் செயல்முறைகளில் இளையோர் சமுதாயத்தின் பரந்த பங்களிப்பு சாத்தியமாவதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்களில் இளைஞர்களின் பங்கும் பொறுப்பும் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.