பாலஸ்தீனத்தின் வரி வருவாயைப் பறிமுதல் செய்யும் இஸ்ரேலிய சட்ட மசோதாவுக்கு OIC கடும் கண்டனம்

11 ஜூன் 2026, 2:30 AM
பாலஸ்தீனத்தின் வரி வருவாயைப் பறிமுதல் செய்யும் இஸ்ரேலிய சட்ட மசோதாவுக்கு OIC கடும் கண்டனம்

ரமல்லா, ஜூன் 11: பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான வரி வருவாயைப் பறிமுதல் செய்வதற்கான வழிமுறைகளை விரிவுபடுத்தும் புதிய சட்ட மசோதாவிற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்கள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை மீறும் செயல் என்று அது சாடியுள்ளது.

இஸ்ரேலின் இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து எச்சரித்துள்ள ஓ.ஐ.சி, இது பாலஸ்தீன மக்களின் உரிமைகளையும் அவர்களின் நிதி ஆதாரங்களையும் நேரடியாகப் பறிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளதாக பாலஸ்தீன செய்தி முகமையான 'வாபா' (WAFA) தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் பாலஸ்தீனப் பகுதிகளில் மனிதாபிமான மற்றும் பொருளாதாரச் சூழல் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், இந்த புதிய வரிப் பறிமுதல் சட்டம் அங்குள்ள நிலைமையை மேலும் சீர்குலைக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, சர்வதேச சமூகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று ஓ.ஐ.சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் வருவாயை இஸ்ரேல் பகிரங்கமாகக் கொள்ளையடிப்பதைத் தடுத்து நிறுத்தவும், இஸ்ரேல் அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான அனைத்து வரிப் பணத்தையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் உலக நாடுகளை அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.