கோலாலம்பூர், செப். 19 - பாலஸ்தீனத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில விவசாய மற்றும் உணவுப் பொருள்களுக்கு சுங்க வரியிலிருந்து விலக்களிப்பதற்கு மலேசியா கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருள் அப்துல் அஜிஸ் கூறினார்.
பொருளாதாரத்தை மறுநிர்மாணிப்பு செய்வது மற்றும் சமூக பொருளாதார மீட்சிக்காக அடித்தளத்தை அமைப்பதற்கு உதவுவதில் பாலஸ்தீனத்திற்கு மலேசியா உறுதுணையாக இருக்கும். நமது மக்களுக்கு பரஸ்பரம் நீடித்த நன்மைகளைக் கொண்டு வர பாலஸ்தீன சகாக்களுடன் அணுக்கமாகப் பணியாற்ற விரும்புகிறோம் என்று அவர் சொன்னார்.
வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் மலேசியாவுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அதிக சந்தை வாய்ப்புகள் உள்ள துறைகளாக விளங்கும் ஹலால் தொழில்துறை, டிஜிட்டல் பொருளாதாரம், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை ஆகியவற்றில் நீடித்த வர்த்தக உறவுகளை ஏற்படுத்துவதில் மலேசியாவும் பாலஸ்தீனமும் கொண்டிருக்கும் பகிரப்பட்ட தொலைநோக்கு இலக்கிற்கு உதாரணமாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கு நடைபெற்றது. இதில் மலேசியாவின் சார்பில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஹைரி யாக்கோப்பும்
மலேசியாவுக்கான பாலஸ்தீன அரசதந்திரி வாலிட் அபு அலியும் கையெழுத்திட்டனர்.
பயிற்சி, நிபுணத்துவ பரிமாற்றம் மற்றும் தனியார்துறை பங்காளித்துவ ஊக்குவிப்பு ஆகியவற்றின் வாயிலாக திறன் மேம்பாட்டை வளர்ப்பதையும் இந்த ஒப்பந்தம் நோக்கமாக கொண்டுள்ளது.