காஸா , செப். 4 - காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வர வகை செயயும் விரிவான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடைவதற்கான ஹமாஸின் பரிந்துரையை இஸ்ரேல் நேற்று நிராகரித்தது.
காஸா நகர் மீது பெரிய அளவிலானத் தாக்குதலை நடத்த இராணுவம் தயாராக உள்ளதாக அந்நாடு கூறியுள்ளது என்று சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
தாங்கள் "விரிவான ஒப்பந்தத்தை" எட்டுவதற்குத் தயாராக இருப்பதாக ஹமாஸ் நேற்று ஓர் அறிக்கையில் வலியுறுத்தியது. அதன்படி காஸாவில் உள்ள இஸ்ரேலிய கைதிகள் இஸ்ரேலில் உள்ள பல பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்படுவார்கள்.
இந்த ஒப்பந்தத்தில் நிரந்தர போர்நிறுத்தம், காஸாவிலிருந்து இஸ்ரேலிய துருப்புக்களை திரும்பப் பெறுதல், மனிதாபிமான உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக எல்லைக் கடப்புகளை மீண்டும் திறப்பது மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளைத் தொடங்குவது ஆகியவை இந்த பரிந்துரையில் அடங்கியுள்ளதாக ஹமாஸ் கூறியது.
காஸாவில் பொது விவகாரங்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்க தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு சுயேச்சை தேசிய நிர்வாகத்தை உருவாக்குவதையும் ஹமாஸ் ஆதரிக்கிறது.
எனினும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்த பரிந்துரையை நிராகரித்தார்.
காஸா பகுதியின் மீதான இஸ்ரேலின பாதுகாப்பு கட்டுப்பாட்டை ஹமாஸ் முழுமையாக ஏற்றுக்கொண்டால் , ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட்டால், பாலஸ்தீனம் அல்லாத நிர்வாகத்தை நிறுவினால் மற்றும் அனைத்து கைதிகளையும் விடுவித்தால் மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் ஒப்புக்கொள்ளும் என்று நெதன்யாகு கூறினார்.
ஹமாஸின் பரிந்துரையை நிராகரித்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்,
காஸா நகரத்தைக் கைப்பற்ற இராணுவம் முழுமையாகத் தயாராக இருப்பதாகக் தெரிவித்தார்.
கடந்த மாதம் கத்தார் வழங்கிய அமைதித் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்ட நிலையில் இஸ்ரேல் அதற்கு பதிலளிக்கவில்லை என்பதோடு அந்த திட்டத்தை அமைச்சரவையின் ஒப்புதலுக்கும் கொண்டு வரவில்லை.
தற்போது இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வரும் இஸ்ரேலிய தாக்குதல் காஸாவை பேரழிவிற்கு உட்படுத்தி பரவலான பஞ்சத்தைத் தூண்டியுள்ளது. காஸா சுகாதார அதிகாரிகளின் கூற்றுபடி 2023 அக்டோபர் முதல் இஸ்ரேலிய தாக்குதல்களால் குறைந்தது 63,746 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸின் போர் நிறுத்த பரிந்துரையை இஸ்ரேல் நிராகரித்தது
4 செப்டெம்பர் 2025, 10:36 AM