கோலாலம்பூர், ஜூன் 15 – கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையின்43வது கிலோமீட்டரில் நேற்று மாலை நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட டிரெய்லர் லாரி ஓட்டுநருக்கு ஏற்கனவே 15 போக்குவரத்துச் சம்மன்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் டத்தோ ஸ்ரீ யஹாயா ஒஸ்மான், விபத்தை ஏற்படுத்திய 40 வயதுடைய அந்த லாரி ஓட்டுநரின் இரத்த மாதிரிகள் நச்சுயியல் பகுப்பாய்விற்காக (Toxicology Analysis) எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது அந்த ஓட்டுநர் தலை மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்துக்கான முழுமையான காரணத்தைக் கண்டறியவும், விசாரணையை நிறைவு செய்யவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இச்சம்பவம் குறித்து 1987 ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் 41(1)பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறினார்.
நேற்று மாலை மணி 4.30 அளவில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்தில், இரும்புத் துகள்களை ஏற்றிச் சென்ற அந்த டிரெய்லர் லாரி, 55 வயது மதிக்கத்தக்க நபரால் ஓட்டப்பட்ட ஹோண்டா சிட்டி காரின் மீது கவிழ்ந்து நசுக்கியது. அந்த காரில் ஓட்டுநருடன் ஒரு வயது குழந்தை முதல் 58 வயது வரையிலான மூன்று பயணிகள் பயணித்துள்ளனர்.
காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையின்படி, கோலாலம்பூரிலிருந்து குவாந்தான் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த டிரெய்லர் லாரி, விபத்து நடந்த இடத்தில் உள்ள வளைவான இறக்கப் பாதையில் சென்றபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியதாக நம்பப்படுகிறது.
அவ்வாறு கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் இடதுபுறமாகச் சரிந்து விழுந்து, அந்த பாதையில் சென்று கொண்டிருந்த காரின் மீது கவிழ்ந்தது.
இந்த விபத்தின் கோரத்தாண்டவத்தால், காரில் இருந்த ஓட்டுநர் மற்றும் மூன்று பயணிகள் என நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் தெமர்லோ மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
விபத்துக்குள்ளான காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை மீட்பதற்குக் பகாங் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடினார்.
பலியானவர்களின் உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்ட பின்னர், வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அந்த டிரெய்லர் லாரி திடீரெனத் தீப்பற்றி எரிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.







