கோலாலம்பூர் - காராக் அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

22 மே 2026, 3:19 AM
கோலாலம்பூர் - காராக் அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

கோலாலம்பூர், மே 22 - கோலாலம்பூர் - காராக் அதிவேக நெடுஞ்சாலையின் 34-ஆவது கிலோமீட்டரில், கம்போங் சுங்கை சிஞ்சின் அருகே இன்று அதிகாலை நேரிட்ட கொடூர விபத்தில் மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அவர்கள் பயணம் செய்த கார், சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இன்று அதிகாலை 2.07 மணியளவில் இந்த விபத்து குறித்து அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குனர் அகமட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, செலாயாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் அவசர மருத்துவ மீட்புச் சேவைப் பிரிவு ஆகியவற்றுடன் ஆறு பணியாளர்கள் அடங்கிய குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதிகாலை 2.35 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்புப் படையினர், வோக்ஸ்வாகன் (Volkswagen) ரக காரின் இடிபாடுகளுக்குள் நான்கு பேர் சிக்கியிருந்ததைக் கண்டறிந்து, அவர்களை மீட்கும் பணியில் உடனடியாக இறங்கினர்.

எனினும், காரில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார்.

மேலும், அதே காரில் இருந்த 27 வயதுடைய பெண் ஒருவருக்குத் தலையில் பலத்த காயமும், இடது காலில் முறிவும் ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

படுகாயமடைந்த அந்தப் பெண் அவசரச் சிகிச்சைக்காகச் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்ட வேளையில், உயிரிழந்த மூன்று இளைஞர்களின் உடல்களும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அகமட் முக்லிஸ் மொக்தார் மேலும் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.