ஈப்போ, ஜூன் 13: உரிய திட்ட அனுமதியின்றி (Planning permission) கட்டப்படும் கட்டிடங்கள் சட்டவிரோதமானவையாகக் கருதப்படும் என்றும், அத்தகைய கட்டிடங்களுக்கு நீர் அல்லது மின்சார விநியோகம் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட மாட்டாது என்றும் வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஙகா கோர் மிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ரோஹிங்கியா போன்ற வெளிநாட்டு சமூகங்களுடன் தொடர்புடைய சட்டவிரோதக் குடியிருப்புகள் உருவாவதைத் தடுப்பதே இந்த அரசாங்கக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று ஈப்போவில் நடைபெற்ற உரிமை கோரப்படாதப் பணத்திற்கான நடமாடும் கவுண்டரைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ரோஹிங்கியா அகதிகள் தொடர்பான விவகாரம் குடிநுழைவுத் துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும், அவர்கள் தொடர்ந்து சோதனைகளையும் அமலாக்க நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
இருப்பினும், மனிதாபிமான அடிப்படையிலோ அல்லது அகதிகளாகவோ நாட்டிற்குள் நுழையும் எவராக இருந்தாலும், அவர்கள் கண்டிப்பாக அரசாங்கத்தின் முறையான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கொள்கையில் மத்திய அரசு மிகத் தெளிவாக உள்ளது என்று அவர் விவரித்தார்.
சிலாங்கூர், உலு லங்காட்டில் உள்ள சுங்கை தெக்காலி என்ற தொலைதூரப் பகுதியில் ரோஹிங்கியா சமூகத்தினரால் திட்ட அனுமதியின்றி நான்கு மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்துக் கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இதற்கிடையில், வெளிநாட்டினரால் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த வணிகங்கள் குறித்துப் பேசிய அமைச்சர், இந்த ஆண்டு மே மாதம் வரை நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட 4,000 அமலாக்க நடவடிக்கைகளின் மூலம் வெளிநாட்டினருக்குச் சொந்தமான 26,108 வணிக உரிமங்களை (Business licences) அரசாங்கம் ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
வெளிநாட்டினார் மலேசியாவில் வணிகங்களை நடத்தவோ அல்லது வணிக உரிமங்களை வைத்திருக்கவோ சட்டத்தில் இடமில்லை என்றும், அவர்கள் ஊழியர்களாக மட்டுமே பணியாற்ற முடியுமே தவிர வணிகங்களின் உரிமையாளர்களாக மாற முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதுதொடர்பான அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு நாடு முழுவதிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், சட்டவிரோதக் குடியேறிகள் அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் அதுகுறித்து அதிகாரிகளுக்கு உடனடியாகப் புகாரளிக்குமாறு பொதுமக்களையும் கேட்டுக்கொண்டார்.
அடுத்ததாக, உரிமை கோரப்படாத பணத்திற்கான (Unclaimed money) பிரச்சாரம் குறித்துப் பேசிய ஙகா கோர் மிங், தற்போது அரசாங்கத்திடம் மொத்தம் 1,300 கோடி (RM13 billion) ரிங்கிட் உரிமை கோரப்படாமல் உள்ளதாகக் கூறினார்.
பொதுமக்கள் தங்களின் கணக்கு நிலவரத்தைச் சரிபார்த்து இப்பணத்தைப் பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார். இதற்கான செயல்முறை மிகவும் எளிதானது என்றும், பொதுமக்கள் தங்களின் அடையாள அட்டை (IC) மற்றும் வங்கி அறிக்கையை (Bank statement) மட்டும் கொண்டு வந்தால் போதும் என்றும் அவர் விளக்கினார்.
1965ஆம் ஆண்டு உரிமை கோரப்படாத பணச் சட்டத்தின் பிரிவு 13(1)-இன் கீழ், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதப் பரிவர்த்தனையும் இன்றி முடங்கிக்கிடக்கும் நிதிகள் அனைத்தும், கணக்காய்வாளர் ஜெனரல் துறையால் நிர்வகிக்கப்படும் உரிமை கோரப்படாதப் பணக் கணக்கிற்கு மாற்றப்படும் என்று அவர் கூறினார்.
இந்தப் பணம் அனைத்தும் அதற்குரிய உண்மையான உரிமையாளர்களுக்குச் சொந்தமானது என்றாலும், தங்களிடம் இவ்வாறு உரிமை கோரப்படாத பணம் இருப்பது குறித்து பலருக்கு விழிப்புணர்வு இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வாரம் தொடங்கி முதற்கட்டமாகக் கெப்பாயாங் (Kepayang) மாநில சட்டமன்றத் தொகுதியில் இப்பிரச்சாரம் தொடங்கப்படும் என்றும், பேராக் மாநிலம் முழுவதும் உள்ள பக்காத்தான் ஹராப்பான் மக்கள் பிரதிநிதிகள் தங்களின் தொகுதிகளுக்குச் சென்று பொதுமக்கள் தங்களின் பணத்தை மீட்டெடுக்க உதவுவார்கள் என்றும் அமைச்சர் ஙகா கோர் மிங் மேலும் தெரிவித்தார்.







