ஷா ஆலம், ஜூன் 10 – சுங்கை தெக்காலி பகுதியில் சட்டவிரோதக் குடியேற்றங்களும் அனுமதியற்ற கட்டட அமைப்புகளும் தொடர்ந்து நீடிப்பதற்கு, தங்களின் சொந்த நிலங்களை அதற்கு அனுமதிக்கும் நில உரிமையாளர்களே முதன்மைக் காரணியாக விளங்குகின்றனர் என்று டூசுன் துவா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோஹான் அப்துல் அஜிஸ் சாடியுள்ளார்.
அண்மையில் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்ட சட்டவிரோதக் குடியேற்றம் குறித்த காணொளிக்குத் தமது முகநூல் பதிவின் வாயிலாகப் பதிலளித்த அவர், இது ஒரு தொடர்ச்சியான பிரச்சனை என்றும், கடந்த ஆண்டு நடைபெற்ற உலு லங்காட் மாவட்டச் செயல்பாட்டுக் குழுக் கூட்டத்திலேயே தாம் இந்த விவகாரத்தை எழுப்பியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு அமலாக்க முகமைகள் இப்பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்புகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்த போதிலும், நில உரிமையாளர்கள் தங்களின் நிலங்களை இத்தகைய சட்டவிரோதக் குடியேற்றங்களுக்குப் பயன்படுத்த அனுமதிப்பதால் அரசாங்கத்தின் முயற்சிகள் பெரிதும் முடக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்களுக்கும் கட்டடங்களுக்கும் நிலங்களை வழங்குவதோடு மட்டுமன்றி, அவர்களுக்குத் தேவையான நீர் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பயன்பாட்டு வசதிகளையும் நில உரிமையாளர்களே ஏற்பாடு செய்து தருவதுதான் இப்பிரச்சனையின் பின்னணியில் இருக்கும் முக்கியக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
இத்தகையச் சூழல் நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களை மீறுவது மட்டுமன்றி, அரசாங்க முகமைகள் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளையும் பெருமளவில் சிக்கலாக்குகிறது என்று ஜோஹான் வருத்தம் தெரிவித்தார்.
மேலும், சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு எதிராகத் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அமலாக்க நடவடிக்கைகள் குறித்த விரிவான விவரங்களைப் பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிடக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், விரைவில் நடைபெறவுள்ள மாவட்டச் செயல்பாட்டுக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரத்தை மீண்டும் தாம் கொண்டு வரவுள்ளதாகத் தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர், இனிவரும் காலங்களில் சட்ட நடவடிக்கை மற்றும் அமலாக்கம் என்பது குடியேறியவர்களைக் கடந்து நில உரிமையாளர்களையும் இலக்கு வைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அப்போதுதான், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொறுப்பேற்கச் செய்யப்படுவார்கள் என்றும், அதன் மூலமே இப்பிரச்சனையின் மூலக் காரணத்தைக் கண்டறிந்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் ஜோஹான் அப்துல் அஜிஸ் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.







