சிலாங்கூர் வனப்பகுதிகளில் மலை ஏறும் நடவடிக்கைகளுக்குத் தற்காலிகத் தடை

12 ஜூன் 2026, 9:25 AM
சிலாங்கூர் வனப்பகுதிகளில் மலை ஏறும் நடவடிக்கைகளுக்குத் தற்காலிகத் தடை

ஷா ஆலம், ஜூன் 12: சிலாங்கூர் மாநிலத்தின் எல்லைக்குட்பட்ட அனைத்து நிரந்தர வனப்பகுதிகளிலும் (HSK) 'டிரான்ஸ் ஹைக்கிங்' (Trans hiking) மற்றும் 'கம்ப்ரெஸ்டு ஹைக்கிங்' (Compressed hiking) போன்ற சவாலான நீண்டதூர மலை ஏறும் நடவடிக்கைகளுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் எதிர்வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகச் சிலாங்கூர் மாநில வனத்துறை அறிவித்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வனத்துறை குறிப்பிட்டுள்ளது.

எனினும், இந்தத் தற்காலிகத் தடை எப்போது வரை நீடிக்கும் அல்லது எப்போது மீண்டும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறித்த காலக்கெடு எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மூடப்பட்ட வனப்பகுதிக்குள் அனுமதியின்றி நுழைவது சட்டப்படி குற்றமாகும் என்பதால், இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது 1985-ஆம் ஆண்டு தேசிய வனவியல் சட்ட அமலாக்க அரசாணையின் பிரிவு 47-இன் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்று வனத்துறை எச்சரித்துள்ளது.

இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு 30,000 ரிங்கிட்டிற்கு மிகாத அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுவாக, 'டிரான்ஸ் ஹைக்கிங்' என்பது ஒரு புள்ளியில் தொடங்கி நீண்ட தூரம் பயணித்து மற்றொரு புள்ளியில் முடிக்கும் மலையேற்றத்தையும், 'கம்ப்ரெஸ்டு ஹைக்கிங்' என்பது பல நாட்கள் மேற்கொள்ள வேண்டிய மலையேற்றத்தை மிகக் குறுகிய காலத்திற்குள் சுருக்கி மேற்கொள்ளும் தீவிர மலையேற்றத்தையும் குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த வாரம் பேராக் மாநில வனத்துறை, அங்குள்ள பல அதிக ஆபத்துள்ள மலைப் பாதைகளில் ஒரு நாள் மலையேற்றம் மற்றும் தீவிர மலை ஏறும் நடவடிக்கைகளுக்கு உடனடித் தடை விதித்திருந்தது.

மலைப் பாதைகளின் ஆபத்து நிலை மற்றும் நிலப்பரப்பு நிலைமைகளை ஆய்வு செய்த பின்னரே, மலையேறுபவர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு அந்த முடிவு எடுக்கப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.