புத்ராஜெயா, ஜூன் 12: ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்கான முக்கிய தேதிகள் மற்றும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காகத் தேர்தல் ஆணையம் (EC) இன்று சிறப்பு கூட்டத்தைக் கூட்டுகிறது.
தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹாரூன் தலைமையில், புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத் தலைமையகத்தில் காலை 10 மணியளவில் இக்கூட்டம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தை அடுத்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றும் நடத்தப்படவுள்ளது.
இன்றைய கூட்டத்தில், தேர்தல் ஆணை பிறப்பிக்கப்படும் தேதி, வேட்புமனுத் தாக்கல், முன்கூட்டிய வாக்குப்பதிவு, பொது வாக்குப்பதிவு நாள் மற்றும் பிரச்சாரக் காலம் உள்ளிட்ட முக்கிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இரு மாநிலத் தேர்தல்களையும் சுமுகமாக நடத்துவதற்கான இதர ஏற்பாடுகள் குறித்தும் இதில் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் 1-ஆம் தேதி, ஜோகூர் மாநிலப் பிரதிநிவரான துங்கு மஹ்கோத்தா இஸ்மாயிலின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, 56 இடங்களைக் கொண்ட ஜொகூர் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் டத்தோ ஓன் ஹஃபிஸ் காசி அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஜூன் 4-ஆம் தேதி நெகிரி செம்பிலான் யாங் டிபெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் ஒப்புதலைப் பெற்று, 36 இடங்களைக் கொண்ட நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம் அடுத்த நாள் கலைக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாரூன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






