ஜகார்த்தா, மார்ச் 12 – இந்தோனேசியாவின் பல முக்கிய எரிமலைகள் ஒரே நேரத்தில் சீறத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள கிழக்கு புளோரெஸ் பகுதியில் அமைந்துள்ள 'லெவோடோபி லாகி-லாகி' எரிமலை, நேற்று (புதன்கிழமை) காலை சுமார் இரண்டு நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக வெடித்துச் சிதறியது. இந்தச் சீற்றத்தின்போது எரிமலையின் உச்சியிலிருந்து சுமார் 800 மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் மேகங்கள் வான்நோக்கிப் பாய்ந்ததாக உள்ளூர் கண்காணிப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேவேளையில், கிழக்கு ஜாவாவில் உள்ள புகழ்பெற்ற 'செமேரு' எரிமலையும் இன்று மீண்டும் வெடித்தது. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் இந்த எரிமலை 32-வது முறையாக வெடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய வெடிப்பின்போது சுமார் 400 மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் மேகங்கள் வெளியேறின.
இதற்கிடையில், மத்திய ஜாவாவில் உள்ள 'மெராபி' எரிமலையும் இன்று புதன்கிழமை தனது சீற்றத்தைத் தணிக்கவில்லை. இந்த எரிமலையிலிருந்து உருகிய குழம்புகள் (Lava) சுமார் 1.8 கிலோமீட்டர் தூரம் வரை 'சாட்' (Sat) நதியை நோக்கி வழிந்து ஓடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் தணிப்பு மையத்தின் மெராபி கண்காணிப்புப் பிரிவுத் தலைவர் அகுஸ் புடி சாந்தோசோ இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், நிலத்தடியில் மேக்மா குழம்பின் ஓட்டம் இன்னும் தொடர்வதால், அது திடீரெனப் பெரும் வெப்ப மேகங்களை (Pyroclastic flows) உருவாக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.
உலகிலேயே அதிகப்படியான எரிமலைகளைக் கொண்ட 'பசிபிக் நெருப்பு வளைய' (Pacific Ring of Fire) பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில், 120-க்கும் மேற்பட்ட செயலில் உள்ள எரிமலைகள் உள்ளன. தற்போதைய சூழலில் எரிமலைப் பகுதிகளைச் சுற்றியுள்ள மக்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








