சுங்கை பட்டாணி, ஜூன் 7 – உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோக நெருக்கடி நிலவி வரும் இச்சூழலில், உள்நாட்டில் எண்ணெய் விலையை உயர்த்தும் நடவடிக்கைக்குத் தாம் ஒருபோதும் உடன்படப் போவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதற்கு மாறாக, விலை உயர்வால் நாட்டின் பொதுமக்கள் கூடுதல் சுமையினைக் எதிர்கொள்வதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசாங்கம் மாதந்தோறும் பெருந்தொகையை மானியமாக வழங்கி அந்தச் செலவினங்களைத் தொடர்ந்து ஏற்கும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
இங்கு நடைபெற்ற 'ஹிம்பூனான் ராகான் மூடா மடாணி' (Himpunan Rakan Muda MADANI) பேரணித் திட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதமர், "எண்ணெய் மானியத்திற்காக நாம் மாதந்தோறும் எவ்வளவு தொகையைத் தாங்கி வருகிறோம்? முந்தைய பட்ஜெட் ஒதுக்கீடுகளைத் தாண்டி, உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தபோது நாம் சில மாதங்களில் 5 பில்லியன் ரிங்கிட், ஏன் 3 பில்லியன் ரிங்கிட் கூடக் கூடுதல் மானியமாகச் செலுத்தியுள்ளோம்.
அதன் பிறகு, இந்த மானியச் செலவு மாதம் 7 பில்லியன் ரிங்கிட் வரை உயர்ந்தது; தற்போது அது மீண்டும் குறைந்து மாதத்திற்கு 4 பில்லியன் முதல் 5 பில்லியன் ரிங்கிட் வரை கூடுதல் தொகையாகச் செலுத்தப்பட்டு வருகிறது," என்று விளக்கினார்.
அரசாங்கம் மாதந்தோறும் 3 பில்லியன் ரிங்கிட்டை மானியத்திற்காக ஒதுக்கினால் கூட, 10 மாத காலத்திற்குள் அதன் ஒட்டுமொத்தத் தொகை 30 பில்லியன் ரிங்கிட்டை எட்டிவிடும் என்று சுட்டிக்காட்டிய பிரதமர், இவ்வளவு தொகையாக இருந்தபோதிலும், அரசாங்கத்தின் முறையான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் நிதி கசிவுகளை (ketirisan) முற்றிலுமாகத் தடுத்ததன் மூலமாக இந்த மானியச் செலவினங்களை அரசாங்கத்தால் தடையின்றித் தாங்க முடிகிறது என்றார்.
இதே வேளையில், எண்ணெய் மானியங்களைத் தொடர்ந்து வழங்குவதற்காக அரசாங்கம் புதிய கடன்களைப் பெற வேண்டும் அல்லது உள்நாட்டுப் பொதுக் கடனை அதிகரிக்க வேண்டும் என்று சில தரப்பினர் முன்வைக்கும் ஆலோசனைகளைப் பிரதமர் அன்வார் முற்றிலுமாக நிராகரித்தார்.
"நான் நினைத்தால் இப்பொழுதே கடன்களை வாங்கிவிட்டு, பின்னர் ஆட்சியை விட்டு விலகிவிட முடியும். ஆனால், நான் வாங்கும் கடனை நமது அடுத்த தலைமுறைப் பிள்ளைகள்தான் வட்டியும் முதலுமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
எனவே, கடன்படுவது ஒருபோதும் இதற்கான தீர்வாகாது. நமது சொந்த பலத்தில் நம்மால் என்ன செய்ய முடியுமோ, அதைச் சிறப்பான முறையில் செய்து வருகிறோம்," என்று அவர் உறுதியுடன் கூறினார்.
அரசாங்கத்தின் இத்தகைய மக்கள் நலன் சார்ந்த அதிரடி நடவடிக்கைகளின் காரணமாகவே, மலேசியாவில் விற்கப்படும் ஆர்.ஓ.என்.95 (RON95) ரகப் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டு, உலகிலேயே மிகக் குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்கும் நாடுகளில் ஒன்றாக மலேசியா திகழ்கிறது என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இவ்விழாவின் ஒரு பகுதியாக, சுங்கை பட்டாணி, தாமான் கெலாடி பொதுத் திடலில் புதிய பல்நோக்கு மண்டபம் (Dewan Serbaguna) ஒன்றை அமைப்பதற்காக 2 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியொதுக்கீட்டையும் பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமட் தௌபிக் ஜொஹாரி, மக்களவைத் தலைவர் (Yang Dipertua Dewan Rakyat) டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் மற்றும் தலைமைச் செயலாளர் (KSN) டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







