ஷா ஆலம், ஜூன் 8 – ஒட்டுமொத்தமாக 65,200 ரிங்கிட் வரையிலான ரொக்கப் பரிசுகளை அள்ளி வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில கண்டுபிடிப்பு விருதுப் போட்டியில் (AINS) தங்களின் புதிய கண்டுபிடிப்புகளுடன் பங்கேற்குமாறு சிலாங்கூர் மாநிலப் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டிற்கான இந்த போட்டியானது "சிலாங்கூர் மாநிலத்தின் நல்வாழ்வு" (Kesejahteraan Negeri Selangor) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ளதாகச் சிலாங்கூர் மாநில அரசுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப, மாநிலத்தின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், கூடுதல் மதிப்பை உருவாக்கவும் துணையாக இருக்கும் அதிநவீனப் புதிய கண்டுபிடிப்புகளை அங்கீகரிப்பதே இந்த விருதின் முதன்மை நோக்கம் என்று விளக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில அரசுச் செயலாளர் அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "புதிய கண்டுபிடிப்புகளே ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் நல்வாழ்விற்கும் மிக முக்கிய அளவுகோலாக விளங்குகின்றன.
எனவே, மேம்பட்ட மற்றும் செழிப்பான சிலாங்கூர் மாநிலத்தைக் கட்டியெழுப்புவதற்கான இந்த மாபெரும் முயற்சியில் எங்களோடு இணைந்து பங்களிக்குமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் குடிமக்களும் இந்த மாபெரும் போட்டியில் முற்றிலும் இலவசமாகப் பங்கேற்கலாம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போட்டிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் வரும் ஜூலை 15ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் கலந்துகொள்ளவும், தங்களின் பெயர்களைப் பதிவு செய்யவும் விரும்பும் பொதுமக்கள், இதற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் உள்ள 'கியூஆர்' (QR) குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது https://inovasi.selangor.gov.my/ என்ற அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தின் வழியாகத் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







