ஷா ஆலம், ஜூன் 7 – மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் இழப்பீடு கோரும் நடைமுறைகள் மிகவும் சிக்கலானவை என்ற தவறான அனுமானமே, பொதுமக்கள் அதன் முக்கியத்துவத்தை உணராமல் இருப்பதற்குக் முதன்மைக் காரணமாகும் என்று பேங்க் முஅமலாத் மலேசியா நிறுவனத்தின் தலைமைப் பொருளியல் நிபுணர் முகமட் அஃப்சானிசாம் அப்துல் ரசீத் தெரிவித்துள்ளார்.
பலரும் தங்களின் வாழ்க்கையில் மருத்துவக் காப்பீடு எடுப்பதற்கு முன்னுரிமை வழங்குவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், காப்பீட்டு விதிமுறைகளைப் புரிந்துகொள்வது கடினம் என்ற எண்ணமும், நோய்கள் வயதான காலத்தில் மட்டுமே வரும் என்ற தவறான புரிதலும் பொதுமக்களிடையே நிலவி வருவதாகக் கூறினார்.
இதன் காரணமாகவே, இளம் வயதினர் தங்களின் ஆரம்பக் காலத்திலிருந்தே மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் சேமிக்க வேண்டிய அவசியத்தை உணராமல் இருக்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மீடியா சிலாங்கூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் விவரித்த அஃப்சானிசாம், "இத்தகைய எண்ணங்களின் காரணமாகவே, குறிப்பாக நாட்டின் இளைஞர்கள், குறைந்த செலவிலான மருத்துவச் சிகிச்சைகளுக்காகப் பொது மருத்துவமனைகளையே முழுமையாக நம்பியிருக்கிறார்கள். தங்களின் இதர அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், காப்பீடு எடுப்பதை அவர்கள் தங்களின் முதன்மைப் பட்டியலில் சேர்ப்பதில்லை," என்று விளக்கினார்.
பொதுமக்களின் இந்தச் சிந்தனைப் போக்கில் அவசரமாக மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், எதிர்பாராத உடல்நலக் குறைவுகள் ஏற்படும் வேளையில் காப்பீடு மட்டுமே ஒரு சிறந்த பாதுகாப்பு அரணாக விளங்கும் என்றார். கடுமையான நோய்களுக்கான சிகிச்சைச் செலவுகள் மிக அதிகமாக இருக்கும் என்பதால், நோய்வாய்ப்பட்டு வேலை செய்ய முடியாமல் வருமானத்தை இழக்கும் போது, அது கடுமையான மன உளைச்சலுக்கும் வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.
ஒருவர் தகுந்த மருத்துவப் பாதுகாப்பு இல்லாமல் திடீரென நோய்வாய்ப்படும்போது, அதற்கான சிகிச்சைச் செலவுகள் அனைத்தையும் அவரே தனிப்பட்ட முறையில் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது ஒட்டுமொத்தக் குடும்பத்தின் நிதி நிலையைத் தலைகீழாக மாற்றி, பெரும் நெருக்கடியை உண்டாக்கிவிடும் என்று அவர் மேலும் கூறினார்.
எனவே, ஒருவரிடம் முறையான மற்றும் போதுமான மருத்துவக் காப்பீடு இருக்கும் பட்சத்தில், பெரும் சிகிச்சைச் செலவுகளால் ஏற்படும் நிதி அபாயங்களையும், அதனால் குடும்பத்தாருக்கு ஏற்படும் மன ரீதியிலான அழுத்தங்களையும் மிகச் சிறந்த முறையில் கையாண்டு மேலாண்மை செய்ய முடியும் என்று கூறி அஃப்சானிசாம் தனது பேட்டியை நிறைவு செய்தார்.







