சிலாங்கூர் மடாணி தொழில்முனைவோர் நிதியுதவி; 107 தொழில்முனைவோருக்கு 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

7 ஜூன் 2026, 2:57 AM
சிலாங்கூர் மடாணி தொழில்முனைவோர் நிதியுதவி; 107 தொழில்முனைவோருக்கு 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூன் 7– சிலாங்கூர் மாநிலத்தின் மடாணி தொழில்முனைவோர் நிதியின்கீழ் (DUMS), மாநிலத்தில் உள்ள 107 சிறு மற்றும் நுண் தொழில்முனைவோர் பயனடையும் வகையில் 2 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டமானது, உள்நாட்டுத் தொழில்முனைவோர் தங்களின் உண்மையான வணிகத் தேவைகளுக்கு ஏற்ப, தகுந்த உபகரணங்கள் மற்றும் சொத்துகளைப் பெற்று, தங்களது வணிகச் செயல்பாட்டுத் திறன், உற்பத்தித் திறன் மற்றும் சந்தைப் போட்டித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

ஷா ஆலம் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கான அதிகாரப்பூர்வ நினைவுக் கேடயம் வழங்கும் விழாவிற்குப் பிறகு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிதியுதவியைப் பெற்ற மாவட்டங்களின் வரிசையில் உலு லங்காட் மாவட்டம் 22 பயனாளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சபாக் பெர்ணம் (16), கிள்ளான் (15), கோம்பாக் (12), பெட்டாலிங் (12), சிப்பாங் (8), உலு சிலாங்கூர் (8), கோலா லங்காட் (7) மற்றும் கோலா சிலாங்கூர் (7) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

மேலும் பேசிய நஜ்வான் ஹலிமி, இவ்வாண்டின் சிலாங்கூர் மடாணி தொழில்முனைவோர் நிதியுதவித் திட்டத்தில், நிதியுதவிக்குப் பிந்தைய கண்காணிப்பு முறைமை (post-aid monitoring system) புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

சிலாங்கூர் மந்திரி புசார் அறக்கட்டளையின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் மூலம், நிதியுதவி பெற்ற தொழில்முனைவோரின் வணிகச் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் வளர்ச்சி ஆகியவை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அவர் விளக்கினார்.

இந்தக் கண்காணிப்பு முறையானது, வழங்கப்பட்ட நிதியுதவியின் மூலம் தொழில்முனைவோரின் வருமானம் எவ்வளவு உயர்ந்துள்ளது மற்றும் அவர்களின் வணிகச் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவற்றை துல்லியமாக அளவிட உதவும். அதோடு மட்டுமன்றி, வருங்காலங்களில் மாநில அரசு மேலும் பயனுள்ள மற்றும் திறம்படச் செயல்படக்கூடிய தொழில்முனைவோர் திட்டங்களைத் திட்டமிடுவதற்கும் இது பெரிதும் துணையாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய புதிய அணுகுமுறையின் காரணமாக, இந்தத் திட்டம் வெறும் நிதியுதவி வழங்கும் ஒரு சாதாரணத் திட்டமாக இல்லாமல், தொழில்முனைவோரின் நீண்டகால வளர்ச்சி மற்றும் வெற்றியை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான தொழில்முனைவோர் மேம்பாட்டுச் சூழலமைப்பாக (ecosystem) உருவெடுத்துள்ளது என்று நஜ்வான் ஹலிமி பெருமிதத்துடன் விவரித்தார்.

உள்நாட்டுச் சிறு மற்றும் நுண் தொழில்முனைவோருக்குத் தேவையான வணிக உபகரணங்களை வழங்குவதோடு, அவர்களுக்கு முறையான வணிக மேம்பாட்டு ஆதரவை வழங்குவதற்காகச் சிலாங்கூர் மாநில அரசின் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு (UPEN) மற்றும் இளைஞர், விளையாட்டு, தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை மாநிலக் காப்பாளர் அலுவலகம் ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு சிறப்பான திட்டமே இந்தச் சிலாங்கூர் மடாணி தொழில்முனைவோர் நிதியுதவி (DUMS) திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.