ஷா ஆலம், ஜூன் 5: சிலாங்கூர் பொது நூலகத்தின் 'Language Discovery' திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான அடிப்படை மொழி வகுப்பின் ஆறாவது அமர்வுக்கான பதிவுகள் தற்போது பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளன.
மாநில அரசாங்கத்தின் மானியத்தின் கீழ் இந்த வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுவதாகச் சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (PPAS) தனது முகநூல் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
"இத்திட்டத்தின் கீழ் ஆங்கில மொழி கற்பிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் 'Language Discovery' கணக்கைப் பதிவு செய்து வெற்றிகரமாக இணைந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இயங்கலை (online) வகுப்புகள், மூன்று மாத காலத்திற்கு, மாதத்திற்கு நான்கு முறை நடைபெறும் என PPAS தெரிவித்துள்ளது.
பதிவுகளை www.ppas.gov.my/language_discovery என்ற அகப்பக்க இணைப்பின் மூலம் மேற்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 016-206 4264 அல்லது 011-5879 1664 என்ற எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
மக்களின் பன்மொழித் திறனை மேம்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும் ஒரு நடவடிக்கையாக, இந்த ஆண்டு முதல் மாநில அரசாங்கம் இலவச இயங்கலை வேற்று மொழி வகுப்புகளை வழங்குவதாக இதற்கு முன்னர் டத்தோ மந்திரி புசார் கூறியிருந்தார்.
மொழியானது மலேசியாவை உலகளாவிய அளவில் போட்டியிடச் செய்யும் ஒரு பலமே தவிர, அது பிளவுகளுக்கான காரணம் அல்ல என்ற மாநில அரசாங்கத்தின் நம்பிக்கையை இந்த அணுகுமுறை நிரூபிக்கிறது என்று டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரிங்கிட் 500,000 மதிப்பிலான சிறப்பு மானியத்தை அவர் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.








