சிலாங்கூர் சாரிங்: இலவச மருத்துவப் பரிசோதனை மூலம் 8,000 பேர் பயனடைய இலக்கு

5 ஜூன் 2026, 3:59 AM
சிலாங்கூர் சாரிங்: இலவச மருத்துவப் பரிசோதனை மூலம் 8,000 பேர் பயனடைய இலக்கு

ஷா ஆலம், ஜூன் 5: சிலாங்கூர் மாநிலத்தில் புற்றுநோய் மற்றும் தொற்றா நோய்கள் (NCD) உள்ளிட்ட தீவிரமான உடல்நலப் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறியும் நோக்கில், இந்த ஆண்டு குறைந்தபட்சம் 8,000 மாநில மக்கள் இலவச மருத்துவப் பரிசோதனை மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் 'சிலாங்கூர் சாரிங்' (Selangor Saring) எனும் இந்த இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் நடத்தப்படவுள்ளதாகப் பொதுச் சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளாததால், நாள்பட்ட மற்றும் கடுமையான நோய்கள் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகின்றன என்ற கவலைக்குரிய நிலையை மாற்றுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மருத்துவர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் தரநிலைகளின்படி, ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒருமுறை தங்களின் உடல்நலனைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றாலும், மருத்துவச் செலவுகளின் சுமை காரணமாகப் பலர் அதனைச் செய்வதில்லை என்று ஜமாலியா சுட்டிக்காட்டினார்.

இதனால், சிலாங்கூர் மக்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளும் கலாச்சாரத்தை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் இலக்காகும் என்றும் அவர் கூறினார்.

இப்பரிசோதனைகளின் மூலம் பொதுவாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நாள்பட்ட சிறுநீரகப் பாதிப்புகள் கண்டறியப்படுவதோடு மட்டுமல்லாமல், ஆண்களுக்கான புரோஸ்டேட் (Prostate), பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (Cervical Cancer) மற்றும் குடல் புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்றுநோய்களும் முன்கூட்டியே கண்டறியப்பட்டுத் தகுந்த சிகிச்சைகளுக்கு வழிகாட்டப்படும் என்று அவர் விளக்கமளித்தார்.

இதற்கிடையே, சிலாங்கூர் மாநிலம் முதியவர்கள் அதிகம் வாழும் ஒரு சமூகமாக மாறுவதற்குத் தயாராகி வரும் வேளையில், இந்த இலவசப் பரிசோதனை இயக்கத்தில் முதியவர்களுக்கான பிரத்யேக உடல்நல மதிப்பீடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சிறப்பம்சமானது, முதியவர்கள் தங்களின் வயோதிகக் காலத்திலும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், தரமான வாழ்க்கையை வாழ்வதையும் உறுதிசெய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.

முதியவர்களுக்கான பரிசோதனை முறைகள் சாதாரணப் பரிசோதனைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று குறிப்பிட்ட ஜமாலியா, உதாரணமாக, அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு தூரம் நடக்க முடிகிறது, அவர்களின் கைகளின் பிடிமானம் எந்தளவு வலிமையாக உள்ளது மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த உடல் தகுதித் திறன் போன்ற சிறப்பு பரிசோதனைகள் இதில் அடங்கும் என்றார்.

பல்வேறு பின்னணிகள் மற்றும் அனைத்துப் பருவ வயதினரைக் கொண்ட சிலாங்கூர் மக்களின் ஆரோக்கியத்தை முறையாகப் பாதுகாத்து, அவர்களின் வாழ்வாதாரத் தரத்தை உயர்த்துவதையே மாநில அரசு தன் முதன்மைக் கடமையாகக் கொண்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மக்களுக்கு முற்றிலும் இலவசமாக மருத்துவப் பரிசோதனை வசதிகளை வழங்கும் இந்த 'சிலாங்கூர் சாரிங்' திட்டத்தை மேலும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக, சிலாங்கூர் மாநிலத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் (Belanjawan Selangor 2026) மொத்தம் 2.5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.