ஷா ஆலம், ஜூன் 5: சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ள குறைந்த வருமானம் பெறும் சுமார் இரண்டு லட்சம் மக்கள், இந்த ஆண்டு 'இல்திசாம் சிலாங்கூர் செஹாட்' (ISS) சுகாதாரத் திட்டத்தின் கீழ் அடிப்படை மருத்துவச் சிகிச்சை மற்றும் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு பலன்களைப் பெறுவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
இருபது மில்லியன் ரிங்கிட் ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில், டயாலிசிஸ்(Dialysis), உள்நோயாளி சிகிச்சை (Hospitalisation) மற்றும் கடுமையான நோய்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பலன்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று பொதுச் சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த நிதியுதவியை முறையாகப் பெறுவதை உறுதிசெய்யும் நோக்கில், கடந்த மார்ச் 31-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 80,215 பேர் இந்தத் திட்டத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
முந்தைய ஆண்டுகளில் குடும்பப் பிரிவினருக்கு 500 ரிங்கிட்டும், தனிநபர் பிரிவினருக்கு 250 ரிங்கிட்டும் அடிப்படைச் சிகிச்சைக்காகக் கிளினிக்குகளில் பயன்படுத்தும் வகையில் மட்டுமே இந்தத் திட்டம் முக்கியக் கவனம் செலுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் இதில் மிக முக்கியமான உள்நோயாளி சிகிச்சை பலனும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த அட்டையை வைத்திருப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கிளினிக்குகளில் மட்டுமின்றி, பேனல் பட்டியலில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளிலும் அதிகபட்சமாக 10,000 ரிங்கிட் வரை உள்நோயாளி சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறைந்த வருமானம் பெறும் மக்களின் மருத்துவச் சிகிச்சைச் செலவைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் நெரிசலையும் பெருமளவில் குறைக்க உதவுகிறது என்று ஜமாலியா விளக்கமளித்தார்.
மேலும், இந்த அட்டையைக் கொண்டிருப்பவர்கள் பேனல் கிளினிக்குகளில் மேற்கொள்ளும் ஒவ்வொரு சிகிச்சைக்கும் சிலாங்கூர் மாநில அரசு 70 ரிங்கிட் வரை மானியம் வழங்குவதால், நோயாளிகள் சிகிச்சைக் கட்டணத்தில் மிகச் சிறிய தொகையை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். இது குறிப்பாகக் கண் புரை அறுவை சிகிச்சை அல்லது தீவிரமற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நோயாளிகளுக்குப் பெரும் நிதி நிவாரணத்தை வழங்குகின்றது.
இதற்கு முன்னதாக இத்திட்டம் குறித்துப் பேசியிருந்த சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, ஏழை எளிய மக்கள் உயர்ந்து வரும் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள உதவும் நோக்கில் மாநில அரசால் கொண்டு வரப்பட்ட முதன்மைத் திட்டங்களில் ஒன்றாக இந்த 'ISS' விளங்குவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மக்கள் இலவச அடிப்படை மருத்துவச் சிகிச்சைகளைப் பெறுவதோடு, மரணக் காப்பீடு மற்றும் கடுமையான நோய்களுக்கான பாதுகாப்புப் பலன்களையும் இத்திட்டம் வழங்குகின்றது.
இந்த மக்கள் நலச் சேவையின் தொடர்ச்சியாக, கடந்த 2025-ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 10,000 ரிங்கிட் வரம்பிற்குட்பட்டு, மூன்று மாதங்கள் வரை இலவசமாகச் டயாலிசிஸ்(Dialysis) சிகிச்சையைப் பெறும் புதிய பலனையும் சிலாங்கூர் மாநில அரசு விரிவுபடுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







