ஷா ஆலம், ஜூன் 4 – சிலாங்கூர், புக்கிட் செகார் மற்றும் தாமான் டாகாங் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கையின் போது, முறையான வணிக உரிமம் இன்றி இயங்கி வந்த வியாபாரிகளின் பொருட்களை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் (எம்பிஏஜே) பறிமுதல் செய்துள்ளது.
அப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வணிக நடவடிக்கைகள் அனைத்தும் முறையான விதிகளுக்கு உட்பட்டும், பாதுகாப்பாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கிலேயே இந்த நகராண்மைக் கழக கண்காணிப்பு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டதாக எம்பிஏஜே தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட சட்ட விதிகளின்படி இந்த பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள வேளையில், வியாபாரிகள் தங்களின் வணிகத்தைத் தொடங்குவதற்கு முன்னதாகவே தேவையான உரிமங்களையும் அனுமதிகளையும் முறையாகப் பெற்றிருக்க வேண்டும் என்று நகராண்மைக் கழகம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது.
அதே வேளையில், இந்த சோதனையின் போது சிலாங்கூர் பகுதியின் பெரும்பான்மையான வியாபாரிகள் முறையான உரிமங்களைப் பெற்று, விதிமுறைகளைப் பின்பற்றி தங்களின் வியாபாரத்தை நடத்தி வந்ததும் கண்டறியப்பட்டது.
நகராண்மைக் கழகத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு, தங்களின் வணிகச் செயல்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வரும் அத்தகைய பொறுப்புள்ள வியாபாரிகளுக்கு எம்பிஏஜே தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
மேலும், வணிகச் சூழலை ஒழுங்காகவும், தூய்மையாகவும் மாற்றுவதற்கு ஏதுவாக, பொதுமக்களிடையே கல்வி மற்றும் விழிப்புணர்வு அணுகுமுறைகளுக்குத் தாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாகவும், இதன் மூலம் கூட்டுப் பொறுப்புணர்வை வளர்க்க முடியும் என்றும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.








