ஒரு சிறிய கிளினிக்காக தொடங்கி, மாநிலத்தின் சுகாதார சேவை, கட்டமைப்பின் முன்னோடியாக மாறியுள்ள செல்கேட் (Selgate)

5 ஜூன் 2026, 4:37 AM
ஒரு சிறிய கிளினிக்காக தொடங்கி, மாநிலத்தின் சுகாதார சேவை, கட்டமைப்பின் முன்னோடியாக மாறியுள்ள செல்கேட் (Selgate)

ஷா ஆலம், ஜூன் 5: இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, செல்கேட் (Selgate) ஒரு சிறிய கிளினிக்காக மட்டுமே இருந்தது.

தற்போது, சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் துணை நிறுவனமான இது, சுகாதார சேவைகளுக்கான அணுகலை அதிகரிப்பது, உள்கட்டமைப்புகளை உருவாக்குவது மற்றும் சேவையின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பை முன்னின்று வழிநடத்துகிறது.

சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான வணிகத்தில் ஈடுபடுவதற்காக சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் (PKNS) கீழ் 2015 ஆம் ஆண்டு செல்கேட்டின் பயணம் தொடங்கியது.

இருப்பினும், 2013 ஆம் ஆண்டில் PKNS அதன் 11 துணை நிறுவனங்களை ஒன்றிணைத்து அவற்றின் எதிர்கால திசையை மறுபரிசீலனை செய்தபோது இதற்கான அடிப்படை உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில் செல்கேட் என்ற ஒரு நிறுவனம் உருவாகவில்லை.

செல்கேட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ நூர் ஹிஷாம் முகமட் கவுத் கூறுகையில், அப்போது விவாதிக்கப்பட்ட நிறுவனங்களில் பி.கே.என்.எஸ் ஹோல்டிங்ஸ் (PKNS Holdings) நிறுவனமும் ஒன்றாகும். ஊழியர்கள் இல்லாததால் அது ஏறக்குறைய மூடப்படும் நிலையில் இருந்தது என்றார்.

இதற்கு முன்பு, வீட்டுவசதித் திட்டங்கள் மற்றும் சொத்து விற்பனைக்கான விளம்பரம் மற்றும் சந்தைப் படுத்தல் உள்ளிட்ட ஒப்பந்த சேவைகளை மேற்கொள்வதற்காக தனியார் துறை ஊழியர்களைப் பயன்படுத்தி, PKNS-இன் சந்தைப்படுத்தல் பிரிவாக PKNS ஹோல்டிங்ஸ் செயல்பட்டு வந்தது.

PKNS ஹோல்டிங்ஸின் எதிர்கால திசையை முன்வைக்கும் பொறுப்பு நூர் ஹிஷாமிடம் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில், நிறுவனத்தை மூடுவது அல்லது புதிய வணிகத் துறைக்கு மாறி அதனை மறுசீரமைப்பது என்ற இரு தெரிவுகள் மட்டுமே அந்நிறுவனத்தின் முன் இருந்தன.

ஜோகூரில் உள்ள கேபிஜே ஹெல்த்கேர் பெர்ஹாட் (KPJ Healthcare Berhad) அல்லது திரங்கானுவில் உள்ள கேஎம்ஐ ஹெல்த்கேர் (KMI Healthcare) போல, PKNS அல்லது சிலாங்கூரில் இதுவரை இல்லாத சுகாதாரத் துறையில் PKNS ஹோல்டிங்ஸ் ஈடுபட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

"அந்தந்த மாநில அரசாங்கங்களுக்கு முக்கிய சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்கும் அல்லது நிர்வகிக்கும் நிறுவனங்கள் அவர்களிடம் உள்ளன. சிலாங்கூரும் அதே போன்ற ஒரு நடவடிக்கையைத் தொடங்குவதற்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை என்று நான் நினைத்தேன்."

"அதிலிருந்து, PKNS ஹோல்டிங்ஸ் சுகாதாரத் துறையில் நுழைய வேண்டும் என்று பரிந்துரைக்கும் முயற்சியை நான் எடுத்தேன், அதுவே இறுதியில் செல் கேட் நிறுவனத்தின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது" என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

பின்னர், ஒரு கிளினிக்காக செயல்படுவதைத் தாண்டி இக்குழுமம் தனது இலக்குகளை விரிவுபடுத்தியது. இதன் ஒரு பகுதியாக, பல கிளினிக்குகளை கையகப்படுத்தி, அவற்றை 'செல்கேர் கிளினிக்' (Self Care Clinic) என்ற பெயரில் மறுபெயரிட்டது.

"நாங்கள் தொடங்கியபோது, சுகாதாரத் துறையில் எங்களுக்கு எந்த முன் அனுபவமும், தொடர்புகளும், சாதனைப் பதிவுகளும் இல்லாததால், பலரும் எங்கள் திறனைப் பற்றி சந்தேகித்தனர்," என்று அவர் கூறினார்.

நிறுவனம் தொடங்கப்பட்ட ஆரம்ப ஆண்டுகளில், நிதியுதவி பெறுவது, செயல்பாட்டு அமைப்பை உருவாக்குவது மற்றும் மேம்படுத்துவதற்கான சுகாதார சொத்துக்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட வலுவான அடித் தளத்தை அமைப்பதிலேயே செல்கேட் கவனம் செலுத்தியது.

"வங்கியின் நம்பிக்கை மிகவும் முக்கியமானது. நிதி நிறுவனங்கள் எங்களின் கணிப்புகளில் நம்பிக்கை வைக்கும் வகையில், எங்கள் பிராண்டையும், ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்கான திட்ட வரைவையும் நாங்கள் உருவாக்க வேண்டியிருந்தது," என்று நூர் ஹிஷாம் மேலும் கூறினார்.

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, நோயறிதல் சேவைகள் (diagnostics), மருந்து விநியோகம் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார ஆதரவு அமைப்பு உள்ளிட்ட ஒரு முழுமையான சுகாதார சுற்றுச்சூழல் கட்டமைப்பை நோக்கி செல்கேட் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.

கிளினிக்குகள், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார ஆதரவு சேவைகள் அனைத்தையும் ஒரே கட்டமைப்பிற்குள் இணைக்கும் ஒரு முழுமையான ஒருங்கிணைந்த மாதிரியை உருவாக்குவது இக்குழுமத்தின் நீண்டகால உத்திகளில் ஒன்றாகும்.

"நாங்கள் ஒரு விரிவான சுகாதார சுற்றுச்சூழல் கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். மருத்துவமனைகளை கட்டி முடிப்பதற்கு முன்பே, மருந்தகம், ஆய்வகம் மற்றும் பராமரிப்பு மேலாண்மை அமைப்பு போன்ற ஆதரவு சேவைகளை நாங்கள் உருவாக்கி விட்டோம்," என்று அவர் தெரிவித்தார்.

குறிப்பாக பொது மற்றும் தனியார் சுகாதார சேவைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலம், தரமான சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகலை அதிகரிக்கும் இலக்கின் அடிப்படையில் செல்கேட்டின் வளர்ச்சி வழி நடத்தப்படுகிறது.

"நோயாளிகளின் அனுபவத்தை மேம்படுத்த மக்களுக்கு விரைவான அணுகலும், சிறந்த தொடர்ச்சியான சிகிச்சையும் தேவை என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்."

"அதே நேரத்தில், சிகிச்சைகளுக்கான செலவுகள் குறித்தும் அவர்கள் கவலைப்படுகிறார்கள். தரத்தில் சமரசம் செய்யாமல் சுகாதார அமைப்பை எவ்வாறு வடிவமைப்பது என்பதே சவாலாக உள்ளது. அதனால்தான், ஒருங்கிணைப்பு, தொழில்நுட்பம், தடுப்பு பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றிற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்," என்று அவர் கூறினார்.

தனியார் மருத்துவமனைகளின் செலவு அதிகரிப்பு மற்றும் காப்பீடு சார்ந்த அணுகல் தொடர்பான நிதிச் சுமை ஆகியவற்றின் காரணமாக, மலிவான விலையில் சிகிச்சைப் பெறுவது ஒரு முக்கிய சவாலாகவே உள்ளது என்பதை நூர் ஹிஷாம் ஒப்புக்கொண்டார்.

"தனியார் சுகாதார சேவை காப்பீட்டையே அதிகம் சார்ந்துள்ளது. பலர் காப்பீட்டுத் தொகையை (premium) செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த இடைவெளியைத்தான் நாங்கள் சரிசெய்ய முயற்சிக்கிறோம்," என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.