பிறப்பு முதல் வாழ்வின் இறுதி வரை: ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்பு மாதிரியை உருவாக்குகிறது செல்கேட்

4 ஜூன் 2026, 2:53 AM
பிறப்பு முதல் வாழ்வின் இறுதி வரை: ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்பு மாதிரியை உருவாக்குகிறது செல்கேட்

ஷா ஆலம், ஜூன் 4 - "பிறப்பு முதல் வாழ்வின் இறுதி வரை" என்ற பராமரிப்பு கருத்தாக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் செல்கேட் கார்ப்பரேஷன்ஸ் சென். பெர்ஹாட் (Selgate Corporations Sdn Bhd), அடுத்த மூன்றாண்டுகளில் முதியோர்களுக்கான பிரத்யேக வசதிகளை உருவாக்கவுள்ளது.

ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்பு மாதிரியை முழுமையாக்குவதற்கான எதிர்கால உள்கட்டமைப்பு மேம்பாட்டின் முக்கிய அங்கமாக இது விளங்கும் என அதன் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ நூர் ஹிஷாம் முகமட் கௌத் தெரிவித்தார்.

மக்கள் தொகை மாற்றங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் நீண்டகாலத் தேவைகள் காரணமாக, முறையான முதியோர் பராமரிப்பு சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

"எங்களது அமைப்பில், பிறப்பு முதல் வாழ்வின் இறுதி வரை பராமரிப்பு தொடங்குகிறது. இதைத்தான் நாங்கள் தற்போது உருவாக்கி வருகிறோம்," என மீடியா
சிலாங்கூருக்கு அண்மையில் அளித்த சிறப்பு நேர்காணலில் அவர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், சிப்பாங்கில் (Sepang) முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றை செல்கேட் தற்போது தீவிரமாக உருவாக்கி வருவதாகவும், இது மூன்றாண்டுகளில் நிறைவடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிளினிக்குகள், மருந்தகங்கள், ஆய்வகங்கள், மருத்துவமனைகள் மற்றும் நீண்டகாலப் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான சுகாதாரப் பராமரிப்புச் சூழலை உருவாக்கும் உத்தியின் ஒரு பகுதியாக இந்தக் கட்டுமானம் அமைகிறது.

நூர் ஹிஷாமின் கூற்றுப்படி, இந்த அமைப்பு மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ச்சியான ஆதரவை வழங்குகிறது. இது மற்ற வழக்கமான சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்களிடமிருந்து செல்கேட்டை தனித்து நிற்கச் செய்கிறது.

"சில தரப்பினர் மருத்துவமனைகளை மட்டுமே கொண்டுள்ளனர், மற்றவர்கள் சுகாதார ஆதரவு அமைப்பைக் கொண்டுள்ளனர். ஆனால், நாங்கள் இவை இரண்டையும் ஒரே வலையமைப்பிற்குள் இணைத்து உருவாக்குகிறோம்," என்று அவர் கூறினார்.

சுகாதாரத்துறையில் உள்ள மற்றொரு முக்கிய சவாலான செவிலியர் பற்றாக்குறைப் பிரச்சனையிலும், சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் (PKNS) கீழ் செயல்படும் தங்களது நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாக அவர் விளக்கினார்.

எந்தவொரு சுகாதாரப் பராமரிப்புத் துறையிலும், குறிப்பாக விரிவடைந்து வரும் மருத்துவமனைகளின் செயல்பாடுகளுக்குச் செவிலியர் பற்றாக்குறை ஒரு முக்கியத் தடையாகவே நீடிக்கிறது என்றார் அவர்.

"பொதுவாக மருத்துவர்கள் பற்றாக்குறை இல்லை. ஆனால், செவிலியர் பற்றாக்குறையைச் சமாளிக்க, திட்டமிடல் மற்றும் பயிற்சி ஆகியவற்றில் நீண்டகால முதலீடு அவசியமாகும்," என்று அவர் மேலும் கூறினார்.

இதைக் கருத்தில் கொண்டு, செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் சிலாங்கூர் பல்கலைக்கழகம் (UNISEL) உட்பட பல்வேறு பயிற்சி நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை செல்கேட் வலுப்படுத்தி வருகிறது.

மேலும், செல்கேட் மருத்துவமனைகளில் பணியமர்த்துவதற்காக, அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 50 செவிலியர் மாணவர்களுக்கு ஆதரவளிக்க சிலாங்கூர் மாநில அரசு இந்த ஆண்டு ரிம 4.7 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.