உலக நாடுகளுக்குப் புதிய அச்சுறுத்தல்: தீவிரமடையும் ‘எல் நினோ’ குறித்து ஐநா எச்சரிக்கை

3 ஜூன் 2026, 2:59 AM
உலக நாடுகளுக்குப் புதிய அச்சுறுத்தல்: தீவிரமடையும் ‘எல் நினோ’ குறித்து ஐநா எச்சரிக்கை

ஜெனிவா, ஜூன் 3: உலகளாவிய வெப்பநிலையை மேலும் அதிகரிக்கச் செய்து, வரவிருக்கும் மாதங்களில் மோசமான வானிலை அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய நடுத்தர அல்லது தீவிர 'எல் நினோ' (El Nino) காலநிலை மாற்றம் உருவாகக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் (UN) வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அவ்வப்போது வெப்பமடைவதையே 'எல் நினோ' என்று அழைப்பதாக உலக வானிலை நிறுவனம் (WMO) தெரிவித்துள்ளது. பொதுவாக இந்த வானிலை மாற்றம் ஒன்பது முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை நீடிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது கடற்பகுதிகளில் உள்ள வெப்பமான நீர்நிலைகள் இந்த 'எல் நினோ' உருவாக்கத்திற்கு வித்திட்டு வருவதாகவும், இதன் காரணமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விடக் கூடுதல் வெப்பநிலை பதிவாகக்கூடும் என்றும் உலக வானிலை நிறுவனம் கணித்துள்ளது.

இந்த எல் நினோ பாதிப்பானது எதிர்வரும் நவம்பர் மாதம் வரை தொடர வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக வானிலை நிறுவனத்தின் பொதுச்செயலாளர் செலஸ்டி சாவ்லோ விடுத்துள்ள அறிக்கையில், வறட்சி, கடுமையான மழைப்பொழிவு ஆகியவற்றைத் தீவிரப்படுத்தி, நிலத்திலும் கடலிலும் வெப்ப அலையின் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய ஒரு பலத்த 'எல் நினோ' நிகழ்வை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2023 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட எல் நினோ பாதிப்பு தான், வரலாற்றிலேயே 2024-ஆம் ஆண்டை மிக வெப்பமான ஆண்டாக மாற்றுவதற்குக் காரணியாக அமைந்தது என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த வானிலை மாற்றமானது பிராந்தியக் காலநிலையைப் பெரிதும் பாதிக்கக்கூடியதாகும். இது தெற்கு தென் அமெரிக்கா, தெற்கு அமெரிக்கா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் மற்றும் மத்திய ஆசியாவில் கடுமையான மழைப்பொழிவைக் கொண்டுவரக்கூடும்.

அதே வேளையில் ஆஸ்திரேலியா, மத்திய அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் தெற்காசியாவின் சில பகுதிகளில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது உலகளாவிய காலநிலையில் வெப்பமயமாதல் விளைவை ஏற்படுத்துவதோடு, பசிபிக் பெருங்கடலில் சூறாவளிகளை உருவாக்கவும் தூண்டுகோலாக அமையும் என்று உலக வானிலை நிறுவனம் விவரித்துள்ளது.

இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்துக் கருத்துரைத்துள்ள ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், இந்த எல் நினோ சூழலானது ஏற்கனவே வெப்பமடைந்து வரும் உலகிற்கு, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் அமையும் என்பதால், உலக நாடுகள் இதனை ஒரு அவசர காலநிலை எச்சரிக்கையாகக் கருத வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதோடு, நிலக்கரி மற்றும் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நாடுகள் மாற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.