கோலா லங்காட், ஜூன் 14: நாட்டில் எல் நினோ (El Nino) தொடங்கியுள்ள நிலையில், தீ விபத்து அபாயங்களைத் தடுப்பதற்கான கண்காணிப்பு மற்றும் ஆயத்தப் பணிகளைச் சிலாங்கூர் மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
தீ விபத்து அபாயங்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து அவற்றிற்குத் தீர்வு காண்பதை உறுதி செய்யும் நோக்கில், சம்பந்தப்பட்ட முகமைகளின் ஒருங்கிணைப்புடன் பல்வேறு நிலைகளில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநிலப் பொதுச் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை நிர்வாகக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
நேற்று பந்தாய் கெலானாங்கில் (Pantai Kelanang) நடைபெற்ற சிலாங்கூர் உலக நீர் தினம் மற்றும் குறைந்த கார்பன் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களிடம் பேசிய அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தீ விபத்துகளைத் தடுப்பதற்காக மாநிலப் பேரிடர் மேலாண்மை பிரிவின் கீழ் இயங்கும் 'ஸ்மார்ட் சிலாங்கூர் செயல்பாட்டு மையம்' (SSOC) மற்றும் அனைத்து மாவட்ட மற்றும் நில அலுவலகங்களின் ஒருங்கிணைப்புடன் செயல்படும் 'மாவட்டப் பேரிடர் செயல்பாட்டு மையம்' (DDOC) மூலம் கட்டமைப்பு வழிமுறைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாநிலப் பேரிடர் மேலாண்மை பிரிவு, இந்த எல் நினோ காலக்கட்டத்தில் வானிலை குறிகாட்டிகளைத் கூர்ந்து கண்காணிப்பதோடு, பேரிடர் சம்பவங்களைக் கையாள்வதில் மாவட்டப் பேரிடர் செயல்பாட்டு மையம் மற்றும் மத்திய பேரிடர் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைந்து தகவல் தொடர்புகளை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்யும் என்று அவர் விளக்கினார்.
இதற்கிடையில், தீ விபத்துகளுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறை (DOE) மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து, சட்டவிரோதமாகக் குப்பை கொட்டும் இடங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் அபாய மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளன.
ஒருவேளை, பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளிலோ அல்லது சதுப்பு நிலங்களிலோ தீ விபத்து ஏற்பட்டால், கனிம மற்றும் புவி அறிவியல் துறையின் (JMG) மேற்பார்வையின் கீழ் உள்ள நிலத்தடி நீர் கிணறுகளை இயக்கி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீரைப் பாய்ச்சித் தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நிதியுதவியை மாநிலப் பேரிடர் மேலாண்மை பிரிவு வழங்கும் என்று ஜமாலியா உறுதியளித்தார்.
இத்தகைய நிலங்களில் தீ பரவாமல் இருப்பதற்கும், பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் முழுமையான ஒத்துழைப்புடன் கூட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.







