கோலாலம்பூர், ஜூன் 3: சமூக ஊடகப் பயனர்களின் வயதைச் சரிபார்க்கும் நோக்கில், மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) அமல்படுத்தியுள்ள புதிய நடைமுறையானது, குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரின் மனநலனைப் பாதுகாப்பதற்கான மிகச் சிறந்ததொரு அணுகுமுறையாகும் என சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இளைய தலைமுறையினரின் மன நலனைப் பேணுவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் எதிர்கால சவால்களை மன உறுதியோடு எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும் இந்த கட்டமைப்பு உதவும் என்பதால், இதற்கு அனைவரும் தங்களின் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நேற்று கோலாலம்பூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் (PBAKL 2026) ஊடகங்களுக்குக் கருத்துரைத்த மந்திரி புசார், அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கை, இளைய சமுதாயத்தின் மனநல ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், பல்வேறு சவால்களைச் சாமர்த்தியமாக எதிர்கொள்வதற்கான அவர்களின் மன வலிமையையும் மேம்படுத்தும் என்று கூறினார்.
மேலும், ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகள் ஏற்கனவே இளைஞர்களிடையே சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
சமூக ஊடகங்கள் இளைஞர்களின் மனவளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்பதால் இந்நடவடிக்கை அவசியமாகிறது என்றும், கடந்த ஆண்டு முழுவதும் தாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த இந்த விவகாரம், ஜொனாதன் ஹெய்ட் எழுதிய 'தி ஆன்சியஸ் ஜெனரேஷன்' (The Anxious Generation) புத்தகத்தில் உள்ள ஆய்வுகளின் வழியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் விவரித்தார்.
இதற்கிடையில், கடந்த ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய விதியின்படி, உரிமம் பெற்ற அனைத்து சமூக ஊடக சேவை நிறுவனங்களும், 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்கள் மட்டுமே கணக்குகளைப் பதிவு செய்வதையும், அவர்களின் வயதிற்குப் பொருத்தமான அம்சங்களை அணுகுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று எம்.சி.எம்.சி (MCMC) அறிவித்துள்ளது.
தற்போது கணக்கு வைத்துள்ள பயனர்களுக்கான வயது சரிபார்ப்பு செயல்முறையானது, சமூக ஊடக நிறுவனங்களால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சரிபார்ப்பு நடவடிக்கையின் போது, 16 வயதிற்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்படும் தற்போதைய பயனர்களுக்கு, அவர்களின் கணக்குகள் முடக்கப்படுவதற்கு அல்லது இடைநீக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாக, தங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் உள்ளிட்ட தரவிறக்கங்களைச் செய்துகொள்ள ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த புதிய வயது சரிபார்ப்பு விதிமுறையானது முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட மலேசியாவில் உரிமம் பெற்ற அனைத்து முக்கிய சமூக ஊடக தளங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.








