ஜோர்ஜ் டவுன், மே 31 – நேற்று இரவு மியன்மார் நாட்டு கட்டுமான ஊழியர் ஒருவர் பலியானதை தொடர்ந்து, ஜாலான் பினாங்கில் உள்ள பொழுது போக்குமையம் தீப்பிடித்த இடத்தில், தீ மற்றும் மீட்புப் படையினர் இன்று 'ஓவர்ஹால்' பணிகளைத் தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றனர்.
பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) இயக்குநர் முகமது ஷோக்கி ஹம்சா கூறுகையில், கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்ததால், கட்டிடத்தின் மையப் பகுதிக்குச் சென்று குளிரூட்டும் பணிகளை மேற்கொள்வதில் தீயணைப்பு வீரர்களுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"கட்டிடத்தின் பெரும் பகுதி இடிந்துள்ளதால், மையப் பகுதிக்குச் செல்வதற்கான வழி குறுகலாக உள்ளது. மேலும், சுவர்கள் ஃபைபரால் செய்யப் பட்டிருந்ததால் தீ வேகமாகப் பரவியது," என்றார்.
"சம்பவ இடத்தில் இன்னும் புகை மூட்டம் காணப்படுகிறது, மேலதிக விவரங்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும்," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
முன்னாள் ஓடியன் திரையரங்கக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த 'மிட்நைட் பிளாக்' என்ற அந்தப் பொழுதுபோக்கு மையத்தின் 70 விழுக்காடு தீயில் சேதமடைந்துள்ளது. இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த கட்டிடம் 1,393.54 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது என்று அவர் கூறினார்.
தீயணைப்பு நடவடிக்கையில் லெபு பந்தாய், ஜாலான் பேராக், பாயான் பாரு மற்றும் பாயா தெருபோங் ஆகிய நான்கு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 38 வீரர்களும், 16 தன்னார்வ தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டதாக முகமது ஷோக்கி கூறினார். நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க சம்பவ இடத்தில் தீயணைப்புக் கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்பட்டது.
தீ விபத்து நிகழ்ந்தபோது, அந்தப் பொழுது போக்கு மையம் புனரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இரவு 8.50 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாகவும், சம்பவ இடத்திற்குச் சென்றபோது கட்டிடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததாகவும் முகமது ஷோக்கி முன்னதாக தெரிவித்திருந்தார்.
இரவு 11.15 மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட பின்னர், கட்டிடத்தின் வெளியேறும் வாசல் அருகே 50 வயது மதிக்கத்தக்க முகமது போஷி சபி உல்லா என்பவரின் சடலம் மீட்கப்பட்டது. அவரது உடலில் முதல் நிலை தீக்காயங்கள் இருந்ததாக அவர் கூறினார்.
தீ விபத்தின்போது உள்ளே சிக்கிக்கொண்ட அவர், வெளியேற முயன்று தோல்வியடைந்திரு-க்கலாம் என்று நம்பப்படுகிறது. மரணத்திற்கு உண்மையான காரணத்தை அறிய, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பினாங்கின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான ஓடியன் திரையரங்கம் முன்பு இந்த கட்டிடத்தில் தான் இயங்கியது. தொடக்கத்தில் 'தியேட்டர் ராயல்' என்றும், பின்னர் 'கிங்ஸ் தியேட்டர்' என்றும் அழைக்கப்பட்டு, இறுதியாக 'ஓடியன் சினிமா' எனப் பெயர் மாற்றம் கண்டது.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மாநிலத்தின் பொழுதுபோக்கு அம்சங்களில் இதுவும் ஒன்றாக விளங்கியது.
1940-ல் நவீனமயமாக்கப்பட்டு, அக்காலத்தின் அதிநவீன வசதிகளுடன் மீண்டும் திறக்கப்பட்ட இந்தத் திரையரங்கம், ஜூலை 31, 2014 அன்று தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது.








