பினாங்கு, மார்ச் 10 - செபராங் ஜெயா மருத்துவமனை (HSJ) வளாகத்தில் உள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில் விடப்பட்டிருந்த நான்கு மாதக் குழந்தை ஒன்று, மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹெய்ல் ஹாரித் முகமட் ஷாஃபாயீஸ் என அடையாளம் காணப்பட்ட அந்த ஆண் குழந்தை, அதிகாலை 4 மணியளவில் மயக்க நிலையில் அதே மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவர்கள் சுமார் ஒரு மணிநேரம் தீவிரச் சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாகக் குழந்தை பராமரிப்பு மையத்தில் பணியாற்றும் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண் ஊழியர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகப் பினாங்கு மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் தெரிவித்தார். விசாரணையைத் தொடர ஏதுவாக அவர்கள் இருவரும் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டு தடுப்புக்காவல் விண்ணப்பம் கோரப்படவுள்ளது. குழந்தையின் மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உடற்கூறாய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உயிரிழந்த குழந்தையின் தாயார் 30 வயதுடைய ஒரு செவிலியர் என்பதும், அவர் இரவுப் பணியில் இருந்ததால் தனது குழந்தையைப் பராமரிப்பு மையத்தில் விட்டுச் சென்றதும் தெரியவந்துள்ளது.
மருத்துவமனை ஊழியர்களின் நலனுக்காக இந்த மையம் 24 மணி நேரமும் செயல்படுவதோடு, அங்கு சிசிடிவி (CCTV) கண்காணிப்புக் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாகக் கொலைக் குற்றத்திற்கான தண்டனைச் சட்டப்பிரிவு 302-இன் கீழ் காவல்துறை வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








