பினாங்கு, ஆகஸ்ட் 4 - ஜோர்ஜ்டவுன் பிரபல சுற்றுலாப் பகுதியான லெபு ஆர்மேனியன் சாலையில் அமைந்திருக்கும் பாரம்பரிய கட்டிடத்தின் மேல் மாடியிலிருந்து கான்கிரீட் கற்கள் விழுந்ததில் இரு இலங்கை சுற்றுப் பயணிகள் காயமடைந்தனர்.
இன்று பிற்பகல் 1 மணி அளவில் நிகழ்ந்த அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 66 வயது மொஹமட் அம்தார், 55 வயது ஃபத்திமா என அடையாளம் காணப்பட்டிருப்பதாக பினாங்கு தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவின் துணை இயக்குநர் ஜோஹ்ன் சாகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
அந்த சுற்றுப் பயணிகள் நாளை சொந்த ஊருக்குத் திரும்ப இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காகப் பினாங்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும், காயமடைந்த அந்த சுற்றுப் பயணிகளுக்கு மாநில அரசாங்கம் தேவையான உதவிகளை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த கட்டடத்தின் கீழ் பகுதியில் சில்லறை கடை இயங்கி வருகிறது. மேல் மாடி காலியாக இருப்பதாக நம்பப்படும் வேளை, அங்கிருந்து கற்களும் பலகையும் விழுந்தன.
இச்சம்பவத்தை அடுத்து, பாரம்பரிய கட்டட உரிமையாளர்கள் , கட்டடத்தின் பாதுகாப்பை அவ்வப்போது கண்காணிக்குமாறு மாநில அரசாங்கம் கேட்டுக் கொண்டது.






