கென்யாவில் இபோலா தனிமைப்படுத்தல் மையம் அமைக்க அமெரிக்கத் திட்டம்: உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது

29 மே 2026, 9:34 AM
கென்யாவில் இபோலா தனிமைப்படுத்தல் மையம் அமைக்க அமெரிக்கத் திட்டம்: உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது

நைரோபி, மே 29: கென்ய நாட்டில் அமெரிக்கா தனது இபோலா (Ebola) தனிமைப்படுத்தல் மையத்தை அமைப்பதற்கான திட்டத்திற்கு அந்நாட்டின் உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை இரவு இந்த வழக்கின் மீதான விசாரணையை மேற்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி பாட்ரிசியா நியாவுண்டி, அமெரிக்காவுடன் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் குறித்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு இறுதி முடிவு எட்டப்படும் வரை, இபோலா நோய்த்தொற்றுக்கு ஆளான அல்லது அந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள எவரையும் கென்யாவிற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையொன்றில், இபோலா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகும் அமெரிக்கக் குடிமக்களைத் தனிமைப்படுத்துவதற்காகக் கென்யாவில் ஒரு சிறப்பு மையம் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அவ்வாறு பாதிக்கப்படும் குடிமக்களுக்கு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை மீண்டும் அமெரிக்காவிற்குள் கொண்டு வராமல், சிகிச்சைக்காக மூன்றாம் நாடு ஒன்றிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டிருந்தது.

அமெரிக்காவின் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கென்யாவின் மனித உரிமை அமைப்பான ‘கதிபா இன்ஸ்டிடியூட்’ (Katiba Institute) நேற்று நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது.

நாடாளுமன்றத்தின் மேற்பார்வையோ அல்லது பொதுமக்களின் பங்களிப்போ இன்றி, மிகவும் ரகசியமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் இபோலா தனிமைப்படுத்தல் மையத்தை அமைப்பது, மக்களின் வாழ்வுரிமை, ஆரோக்கியம், நியாயமான நிர்வாக நடவடிக்கை மற்றும் அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அந்த அமைப்பு தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூன் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி பாட்ரிசியா நியாவுண்டி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.