கொலை மிரட்டல் புகார் தொடர்பில் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் - MACC முன்னாள் தலைமை ஆணையர்

27 மே 2026, 6:58 AM
கொலை மிரட்டல் புகார் தொடர்பில் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் - MACC முன்னாள் தலைமை ஆணையர்

கோலாலம்பூர், மே 27: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC/SPRM) முன்னாள் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாகி, தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றவியல் மிரட்டல் (Criminal Intimidation) குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்குக் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தாம் ஏற்கனவே காவல்துறையினருடன் தொடர்பில் இருப்பதாகவும், இந்த விசாரணைக்கு உதவுவதற்காக வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், தொழிலதிபர் ஆல்பர்ட் டெய் (Albert Tei) என்பவரால் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்று மறுத்த அசாம் பாகி, அவருடன் தமக்கு எவ்வித தொடர்பும் இருந்ததில்லை என்பதைத் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

"உண்மையைக் கூற வேண்டுமென்றால், நான் அவருடன் ஒருபோதும் பழகியதில்லை, அவருடன் தொடர்பு கொண்டதும் இல்லை, அவரிடம் பேசுவதற்கு என் வழக்கறிஞரை அனுப்பியதும் இல்லை," என்று செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறினார்.

தமக்கு எதிரான இந்த விசாரணை நடவடிக்கையைத் தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்ட அசாம் பாகி, அதே வேளையில் புகாரளித்த ஆல்பர்ட் டெய் மீதும் அதிகாரிகள் தீர்க்கமான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரத்தில் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்தும் தாம் பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

நேற்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் பேசுகையில், தண்டனைச் சட்டப் பிரிவு 506-இன் (Section 506 of the Penal Code) கீழ் மேற்கொள்ளப்படும் இந்த விசாரணைக்கு உதவுவதற்காக, மிக விரைவில் அசாம் பாகிக்குக் காவல்துறை நோட்டீஸ் (Summon) அனுப்பவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

சபாவில் உள்ள அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஊழல்களை அம்பலப்படுத்த முயன்றபோது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையரிடமிருந்து தமக்குக் கொலை மிரட்டல்கள் வந்ததாகக் கூறி, கடந்த மே 13 அன்று ஆல்பர்ட் டெய் அளித்த காவல்துறைப் புகாரைத் தொடர்ந்து இந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.