அரஃபா தின வாழ்த்து: பிரார்த்தனைகளை அதிகப்படுத்த முஸ்லிம்களுக்கு அமைச்சரவை அமைச்சர்கள் அழைப்பு

26 மே 2026, 9:27 AM
அரஃபா தின வாழ்த்து: பிரார்த்தனைகளை அதிகப்படுத்த முஸ்லிம்களுக்கு அமைச்சரவை அமைச்சர்கள் அழைப்பு

கோலாலம்பூர், மே 26 – நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக அரஃபா தினத்தின் ஆசீர்வாதங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு முஸ்லிம்களை அமைச்சரவை அமைச்சர்கள் இன்று வலியுறுத்தியுள்ளனர். வழிபாடுகள், ஒற்றுமையின் மதிப்புகளைப் போற்றுதல் மற்றும் பிரார்த்தனைகள் மூலம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் துல்ஹிஜ்ஜா 9-ஆம் தேதி வரும் அரஃபா தினம், இஸ்லாத்தில் ஒரு முக்கிய நாளாகும். இது ஹஜ் வழிபாட்டின் உச்சக் கட்டத்தைக் குறிக்கிறது, அப்போது உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான யாத்ரீகர்கள் அரஃபா திடலில் ‘வுகூஃப்’ செய்வதற்காக ஒன்று கூடுகின்றனர்.

தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறுகையில், இந்த புனிதமான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட நாளில், பிரார்த்தனைகள், திக்ர், இஸ்திஃபார் (பாவமன்னிப்பு கோருதல்) ஆகியவற்றை அதிகப்படுத்தி, எல்லாம் வல்ல இறைவனிடம் மன்னிப்புக் கோர முஸ்லிம்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

"அரஃபா தின நோன்பு நோற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். நாம் அனைவரும் இறைவனின் கருணை, அன்பு மற்றும் பாதுகாப்பில் எப்போதும் இருப்போமாக," என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அசலினா ஒத்மான் சைட், அரஃபா தினத்தன்று, இனம், வம்சாவளி, தரம் அல்லது அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மில்லியன் கணக்கான ஹஜ் யாத்ரீகர்கள் ‘வுகூஃப்’ என்ற மிக முக்கியமான ஹஜ் கடமையை நிறைவேற்ற ஒன்று கூடுகின்றனர் என்றார்.

"மலேசியா மடாணிஎன்ற பன்முகத் தன்மையைக் கொண்டாடும், ஒற்றுமையால் பலப்படுத்தப்படும், மேலும் பரஸ்பர மரியாதை மற்றும் மனிதாபிமான விழுமியங்களால் வழிநடத்தப்படும் ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதில், அரஃபா தினத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பெரிய பாடம் இதுவாகும். அரஃபாவின் இந்த உணர்வு, நல்லிணக்கத்தைப் பேணுவதிலும், ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், அனைத்து மக்களுக்கும் ஒரு சிறந்த மலேசியாவின் எதிர்காலத்தை உருவாக்குவதிலும் நம் இதயங்களை ஒன்றிணைக்கட்டும்," என்றார் அவர்.

இதற்கிடையில், வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு, நாட்டின் உணவு விநியோகத்தைத் தொடர்ந்து உறுதிசெய்ய உழைக்கும் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் மீனவர்கள் உட்பட அனைத்து மலேசியர்களின் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்தார்.

"அவர்களின் கடின உழைப்பு எளிதாக்கப் பட்டு, நல்ல விளைச்சல், அபரிமிதமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அவர்கள் எப்போதும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பாதுகாப்பிலும் கருணையிலும் இருக்க வேண்டும்," என்று கூறிய அவர், குடும்பம், நண்பர்கள் மற்றும் நாட்டுக்காக பிரார்த்தனைகளை அதிகப்படுத்த முஸ்லிம்களை கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி, அரஃபா தினம் இஸ்லாத்தில் கருணை, மன்னிப்பு மற்றும் ஆசீர்வாதங்கள் நிறைந்த ஒரு உன்னதமான நாள் என்றார்.

ஹஜ் பயணம் மேற்கொள்ளாத முஸ்லிம்களுக்கு, இது வழிபாடுகள், பிரார்த்தனைகள், திக்ர், பாவமன்னிப்பு கோருதல் மற்றும் நோன்பு நோற்பது போன்றவற்றை அதிகப்படுத்துவதற்கான ஒரு சிறப்பு வாய்ப்பாகும், ஏனெனில் அதற்கான வெகுமதிகள் மகத்தானவை என்று அவர் குறிப்பிட்டார்.

"உண்மையான மற்றும் நம்பிக்கை நிறைந்த இதயத்தோடு அரஃபா தினத்தின் சிறப்பைப் பெறுவோம். நமது மனந்திரும்புதலைப் புதுப்பித்து, எல்லாம் வல்ல இறைவனிடம் நம்மை நெருக்கமாக்குவோம், இதன் மூலம் ஒவ்வொரு பிரார்த்தனையும் ஏற்றுக் கொள்ளப்படும்," என்று அவர் கூறினார்.

உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காதிர் கூறுகையில், வாழ்க்கையின் சவால்களுக்கு மத்தியில், அடிபணிதல், மனந்திரும்புதல் மற்றும் பிரார்த்தனையின் வலிமை ஆகியவற்றை அரஃபா தினம் முஸ்லிம்களுக்கு நினைவூட்டுகிறது.

"நாம் பாவமன்னிப்பைக் கோருவதை அதிகப்படுத்துவோம், நாம் நேசிக்கும் மக்களின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்திப்போம், மேலும் இறைவன் தனது கருணை மற்றும் வழிகாட்டுதலால் நம் வாழ்வின் படிகளைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று கேட்போம்."

"அனைத்து வழிபாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அனைத்து முஸ்லிம்களுக்கும் ஆசீர்வாதங்கள், மன்னிப்பு மற்றும் மன அமைதி வழங்கப்படட்டும். அரஃபாவில் ‘வுகூஃப்’ செய்யும் யாத்ரீகர்களின் அனைத்து காரியங்களும் எளிதாக்கப்பட்டு, அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜைப் பெறுவார்கள், இன்ஷா அல்லாஹ்," என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.