கோலாலம்பூர், ஏப்ரல் 24 – சிலாங்கூர் மாநில காவல்துறை தலைமையகத்தின் (IPK) குற்றப் புலனாய்வுத் துறை (JSJ) டி11 பிரிவுக்கு, 30 கணினிகளை தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபட்சில் வழங்கினார்.
பெருகிவரும் சிக்கலான மின்னியல் குற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் புலனாய்வுத் திறனை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டது.
பெண்கள், குழந்தைகள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதிலும், நாட்டின் மின்னியல் வெளி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதிலும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திற்கும் (MCMC) மலேசிய அரச காவல்துறைக்கும் (PDRM) இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் இந்த முயற்சி பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
"நாட்டின் அமைதியைப் பேணுவதில் PDRM உறுப்பினர்களின் சேவை, தியாகம் மற்றும் அர்ப்பணிப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்," என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளைத் திறம் படச் செயல்படுத்த காவல்துறைக்குத் தொடர்ந்து பலம் கிடைக்கும் என்றும் ஃபாமி நம்பிக்கை தெரிவித்தார்.
-- பெர்னாமா






