கோலாலம்பூர், மே 26: சுங்கை சீப்புட் மற்றும் கமுந்திங் ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள கிலோமீட்டர் 95.8-இல், சுமார் 100 மீட்டர் நீளமுள்ள கேபிள்கள் திருடப்பட்டதைத் தொடர்ந்து, மலாயா ரயில்வே நிறுவனத்தின் (KTMB) பல இடிஎஸ் (ETS) மற்றும் வடக்கு மண்டலத்திற்கான கேடிஎம் கொமுட்டர் சேவைகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதத்தை எதிர்கொண்டுள்ளன.
இந்தத் திருட்டுச் சம்பவத்தின் காரணமாக அங்குள்ள சிக்னல் எனப்படும் ரயில்வே சமிக்ஞை அமைப்பு முற்றிலும் செயலிழந்துள்ளதாகவும், இதனால் வடக்கு மண்டலத்திற்கான ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கேடிஎம் நிறுவன அறிக்கை கூறுகிறது.
இன்று அதிகாலை வேளையில் கேடிஎம் நிறுவனத்தின் துணைக் காவல்துறையினர் இந்த கேபிள் திருட்டைக் கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்தப்பட்ட சோதனையில், அங்கு கேபிள்கள் மாயமாகி இருப்பதும், அதனால் அந்த வழித்தடத்தின் சமிக்ஞை அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டியிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, வடக்கு மண்டல கேடிஎம் கொமுட்டர் சேவைகள் 23 முதல் 40 நிமிடங்கள் வரையிலான தாமதத்தை எதிர்கொண்டுள்ளன. அதே வேளையில், இந்த வழித்தடத்தைக் கடந்து செல்லும் அனைத்து இடிஎஸ் ரயில் சேவைகளும் 3 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரை தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, கேடிஎம் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, ரயில் சேவைகளை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காகவும், செயல்பாடுகளைச் சீரமைப்பதற்காகவும் பழுதுபார்க்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், பயணிகள் தங்களின் ரயில் பயணங்களின் தற்போதைய நிலை மற்றும் தாமதங்கள் குறித்த புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள கேடிஎம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைச் சரிபார்க்குமாறு அல்லது நிலையங்களில் பணியில் இருக்கும் ஊழியர்களை நாடி உதவி பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேசிய ரயில் அமைப்பின் பாதுகாப்பையும் அதன் நம்பகத்தன்மையையும் சீர்குலைக்கும் இந்த கேபிள் திருட்டுச் சம்பவத்தை தாங்கள் மிகவும் தீவிரமாகப் பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ள கேடிஎம் நிறுவனம், இதனால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்குத் தங்களின் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, பயணிகளின் பொறுமைக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








