சுங்கை பூலோ, டிச 23- கெப்போங்கிலிருந்து சுங்கை பூலோ செல்லும் பிரதான சாலையில் உள்ள கேடிஎம் (KTM) மேம்பாலத்திற்கு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 32 வயதான ஓர் இந்திய பெண் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்தார்.
இந்த சாலை விபத்து குறித்து குறித்து சுங்கை பூலோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு அவசர அழைப்பு கிடைத்தது. டிசம்பர் 23ஆம் தேதி காலை 7.40 மணியளவில் இந்த அழைப்பு கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, ஐந்து அதிகாரிகள் அடங்கிய மீட்புக் குழுவினர் ஒரு தீயணைப்பு வாகனத்துடன் காலை 7.47 மணிக்குச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயணைப்பு படையின் நடவடிக்கை பிரிவு இயக்குநர் கைரூல் நிஜாம் பின் ஜோஹான் இது குறித்துக் கூறுகையில், புரோட்டோன் ஐரிஸ் (Proton Iriz) ரக கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது.
இந்த விபத்தில் 32 வயதுடைய இந்தியப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைச் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலைத் தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி மீட்டெடுத்தனர். பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக உடல் மலேசிய அரச போலீஸ் படையினரிடம் (PDRM) ஒப்படைக்கப் பட்டது.
சம்பவ இடத்தில் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு, காலை 9.00 மணியளவில் மீட்பு நடவடிக்கை முழுமையாக நிறைவடைந்தது. இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க, வாகன ஓட்டிகள் வேகக் கட்டுப் பாட்டைக் கடைப் பிடிப்பதோடு, வாகனத்தைப் பராமரிப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


