ஷா ஆலம், மே 24: சிஜங்காங் மாநிலச் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் வசதி குறைந்த மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, சுமார் 21 குடியிருப்பாளர்களுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய கூடைகள் (Bakul Makanan) வழங்கும் சிறப்புத் திட்டம் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
தெலுக் பாங்கிலிமா காராங்கில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயப் பொது மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் வழி, வசதி குறைந்த பிரிவினருக்குத் தேவையான உதவிகளை வழங்குவதோடு, சமூகத்தின் நலன் தொடர்ந்து பேணப்படுவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம் என பந்திங் சட்டமன்ற உறுப்பினர் பாப்பாராய்டு தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்பட்ட உதவிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தினசரித் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அவர்களின் வாழ்வாதாரச் சுமையைக் குறைப்பதிலும் ஓரளவாவது துணையாக இருக்கும் என்று நம்புவதாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தச் சிறப்பு நிகழ்வில் சிஜங்காங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டத்தோ சுரிஹான் யூசோப், கோலா லங்காட் நகராண்மைக் கழகத்தின் (MPKL) எட்டாம் மண்டல நகராண்மைக் கழக உறுப்பினர் எலிஷா சாம்சன், சிஜங்காங் தொகுதி இந்திய சமூகத் தலைவர் (KKI) முருகன் குணசேகரன், கிராமத் தலைவர்கள் மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் எனப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்தத் திட்டத்தை மிகச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினருக்கும், இதர அனைத்துத் தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றியினைப் பாப்பாராய்டு தெரிவித்துக் கொண்டார்.
சிஜங்காங் தொகுதி மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்காகவும் மேம்பாட்டிற்காகவும், தேவையுள்ள மக்களுக்கு உதவும் இத்தகைய நற்பண்புகளும், ஒற்றுமை மற்றும் சமூக அக்கறை உணர்வுகளும் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தமது உரையில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.








