இந்தோனேசியா, மே 22 - இந்தோனேசியாவின் வட சுலாவெசி மற்றும் வட மலுக்கு தீவுகளுக்கு இடைப்பட்ட மலுக்கு கடற்பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜெர்மன் செய்தி நிறுவனமான டிபிஏ (dpa) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று காலை மலேசிய நேரப்படி சுமார் 9.05 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பிதுங் (Bitung) நகரத்திலிருந்து கிழக்கே சுமார் 116 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில் 48 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளையில், இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் அமைப்பும் (BMKG) இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவாகியிருந்ததை உறுதிப்படுத்தியிருந்தது. தற்போதைய நிலவரப்படி இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பூகம்ப அபாயம் அதிகம் உள்ள பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அப்பால் ரிக்டர் அளவுகோலில் 9.1 ஆகப் பதிவான பயங்கர நிலநடுக்கம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் வரலாறுகாணாத ஆழிப்பேரலையை (சுனாமி) ஏற்படுத்தியது.
இந்தோனேசியா, இலங்கை, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா வரை உள்ள பல நாடுகளைத் தாக்கிய அந்தத் துயரச் சம்பவத்தில் 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








