ஷா ஆலம், மே 20 – மலேசியாவில் இதுவரை இபோலா வைரஸ் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்பதை நாட்டின் சுகாதார அமைச்சு (KKM) உறுதிப்படுத்தியுள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் இந்த ஆட்கொல்லி நோய் பரவி வருவதைத் தொடர்ந்து, மலேசியாவின் சர்வதேச நுழைவாயில்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தற்பொழுது உச்சக்கட்டமாக பலப்படுத்தப்பட்டுள்ளன.
மேற்கூறிய இரு நாடுகளிலிருந்தும் மலேசியாவிற்கு நேரடியாகப் விமானச் சேவைகள் எதுவும் இல்லை என்றாலும், துபாய், தோஹா மற்றும் சிங்கப்பூர் போன்ற முக்கிய விமான நிலையங்களின் வழியாக மலேசியாவுக்கு வரும் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகச் சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள், கடல் துறைமுகங்கள் உள்ளிட்ட அனைத்து சர்வதேச நுழைவாயில்களும் தற்பொழுது முழு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டு, பயணிகளிடம் எபோலா நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பது தீவிரமாகச் சோதிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்து மருத்துவ வசதிகளும் இந்த நோயைக் முன்கூட்டியே கண்டறிவதற்கும், பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களைத் தனிமைப்படுத்திப் பராமரிப்பதற்கும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அதோடு, தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு (IPC) வழிமுறைகளை மிகக் கடுமையான முறையில் பின்பற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவப் பணியாளர்களுக்கான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) போதிய அளவில் இருப்பதை உறுதி செய்துள்ள சுகாதார அமைச்சு, பணியாளர்களுக்கான பயிற்சிகளையும் முடுக்கிவிட்டுள்ளது.
மேலும், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (IMR) மற்றும் தேசிய பொதுச் சுகாதார ஆய்வகம் (MKAK) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், ஆய்வகப் பரிசோதனைத் திறன்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
எபோலா என்பது பாதிக்கப்பட்ட மனிதர்கள் அல்லது விலங்குகளின் இரத்தம் மற்றும் உடல் திரவங்களுடன் ஏற்படும் நேரடித் தொடர்பின் மூலம் பரவக்கூடிய ஒரு மிகக் கடுமையான ஆட்கொல்லி நோயாகும். காய்ச்சல், தலைவலி, தசை வலி, உடல் சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் ரத்தக்கசிவு ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.
இதனால், நோய் பாதிப்புள்ள நாடுகளுக்குச் சென்று திரும்பிய 21 நாட்களுக்குள் இத்தகைய அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சையை நாட வேண்டும் என்று சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, மத்திய ஆபிரிக்காவில் பரவி வரும் இந்த இபோலா அலையை, 'சர்வதேச கவலைக்குரிய பொதுச் சுகாதார அவசரநிலை' (PHEIC) என உலக சுகாதார நிறுவனம் (WHO) கடந்த மே 17-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கடந்த மே 16-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, காங்கோ குடியரசின் இத்தூரி (Ituri) மாகாணத்தில் ஆய்வகப் பரிசோதனை மூலம் 8 இபோலா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 246 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், அங்கு 80 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இதுதவிர, உகாண்டாவின் கம்பாலா (Kampala) நகரில் காங்கோவிலிருந்து பயணித்த இருவருக்கு இந்நோய் உறுதி செய்யப்பட்டு, அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.








