பெட்டாலிங் ஜெயா, மே 15 – நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் தரவு மைய (Data Centre) தொழில்துறையில் மாநிலத்தின் கருத்துக்களைக் கருத்தில் கொள்வதை உறுதி செய்ய, கூட்டரசு அரசாங்கத்தின் 'தரவு மைய பணிக்குழுவில்' (DCTF) சிலாங்கூர் மாநிலம் இணைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கருத்துரைத்த சிலாங்கூர் முதலீட்டு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைக்கான எக்ஸோ உறுப்பினர் இங் ஸீ ஹான், தரவு மையங்களின் வளர்ச்சியை மேற்பார்வையிடும் கூட்டரசு அளவிலான அந்தச் சிறப்புப் பணிக்குழுவில் சிலாங்கூர் மாநிலம் நிரந்தர உறுப்பினராக இடம்பெற ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அந்தக் கோரிக்கைக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டார். நேற்று இரவு நடைபெற்ற 'CXO Closing Gala' நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தின் பிரதிநிதித்துவம் இருந்தால் மட்டுமே தரவு மையங்கள் தொடர்பான முடிவுகளில் உள்ளூர் மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும் என்று சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, தரவு மையங்களின் வளர்ச்சியால் ஏற்படக்கூடிய அதிகப்படியான நீர் பயன்பாடு, மின்சாரத் தடை மற்றும் ஒலி மாசுபாடு போன்றவை குறித்து சிலாங்கூர் மக்கள் கொண்டுள்ள கவலைகளைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
டிஜிட்டல் துறை அமைச்சர் கோவிந்த் சிங் தியோவிற்கு அவர் விடுத்த ஆலோசனையில், மலேசியா 2030-ஆம் ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு (AI) நாடாக உருவெடுக்கும் இலக்கை அடைய வேண்டுமானால், அனைத்து மாநில அரசாங்கங்களும் இந்தப் பணிக்குழுவில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதன் மூலம் சிறந்த திட்டமிடலை மேற்கொண்டு நாடு தழுவிய அளவில் எத்தனை தரவு மையங்கள் தேவை என்பதைத் துல்லியமாக மதிப்பிட முடியும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளையில், மலேசியாவின் செயற்கை நுண்ணறிவுத் துறை வளர்ச்சி குறித்துப் பேசிய இங் ஸீ ஹான், டிஜிட்டல் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடையே இத்திட்டங்களுக்குக் கிடைத்துள்ள நேர்மறையான ஆதரவு, மலேசியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.








