ஷா ஆலம், ஜூலை 5: ஹுலு சிலாங்கூர் (Hulu Selangor) மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில், அம்மாவட்டம் 160 கோடி ரிங்கிட்டிற்கும் அதிக மதிப்புள்ள இரு உயர்தரத் திட்டங்கள் மூலம் புதிய முதலீடுகளைப் பெறவுள்ளது.
சீனாவின் முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமான 'வான்லி டயர்' (Wanli Tire) நிறுவனத்தின் இரண்டாவது வெளிநாட்டுத் தொழிற்சாலை கட்டுமானம் மற்றும் 'எக்ஸ்டிசி நியூ எனர்ஜி' (XTC New Energy) நிறுவனத்தின் லித்தியம் பேட்டரி தயாரிப்புக்கான மூலப்பொருள் தயாரிப்புத் திட்டம் ஆகிய இரண்டு முக்கிய முதலீடுகள் இதில் அடங்கும் என்று சிலாங்கூர் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் (Ng Sze Han) தெரிவித்தார்.
சீனாவின் முக்கிய டயர் தயாரிப்பாளர்களில் ஒன்றான 'வான்லி டயர்' நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தாம் சமீபத்தில் குவாங்சோவிற்கு (Guangzhou) ஒரு குழுவிற்கு தலைமையேற்று சென்றதாகவும், அப்பேச்சு வார்த்தைக்குப் பின்னர் வான்லி டயர் நிறுவனம் தனது இரண்டாவது வெளிநாட்டுத் தொழிற்சாலையை சிலாங்கூரில் கட்டத் திட்டமிட்டதாக" இங் ஸீ ஹான் கூறினார்.
எக்ஸ்டிசி நியூ எனர்ஜி நிறுவனத்தின் லித்தியம் பேட்டரி மூலப்பொருள் திட்டத்துடன் சேர்த்து, இந்த இரு முதலீடுகளும் கிட்டத்தட்ட 160 கோடி ரிங்கிட் மதிப்புடையவை . இத்திட்டங்கள் ஹுலு சிலாங்கூரில் செயல்படுத்தப்படும்," என்று அவர் தமது ஃபேஸ்புக் பதிவின் மூலம் தெரிவித்தார்.
வான்லி டயர் தொழிற்சாலை முதலீடு 137 கோடி ரிங்கிட் மதிப்பை உள்ளடக்கியதுடன், ஆண்டுக்கு 62 லட்சம் டயர்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டது .
இத்திட்டம் உள்ளூர் மக்களுக்கு 1,350 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது உற்பத்தித் துறைக்கான வேலைகள் மட்டுமின்றி,பொறியாளர்கள், தரக் கட்டுப்பாட்டு நிபுணர்கள் மற்றும் மேலாண்மை போன்ற உயர் தகுதி வாய்ந்த வேலைகளையும் உள்ளடக்கியுள்ளது.
ஹுலு சிலாங்கூரில் உள்ள இளைஞர்கள் தங்களின் சொந்த மாவட்டத்தை விட்டு வெளியேறாமலேயே, ஓர் அனைத்துலகத் தயாரிப்பு நிறுவனத்துடன் மிகத் தெளிவான தொழில் வாழ்க்கைப்பாதையைக் கொண்டிருக்க முடியும்.
அதுமட்டுமின்றி, எக்ஸ்டிசி நியூ எனர்ஜி (XTC New Energy) நிறுவனம் லித்தியம் பேட்டரிகளுக்கான 'கேத்தோட்'(cathode) எதிர்மின்வாய் மூலப்பொருளை உற்பத்தி செய்வதற்காக சுமார் 260 மில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சிலாங்கூரில் புதிய எரிசக்தித் துறையின் மதிப்புச் சங்கிலி (value chain) மேலும் வலுவடையும்," என்று இங் ஸீ ஹான் கூறினார்.
உலகத்தரம் வாய்ந்த உற்பத்தித் தொழில்துறையை ஹுலு சிலாங்கூருக்குக் கொண்டு வருவதன் மூலம், இந்த மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியும் இந்த மேம்பாட்டின் பலன்களைப் பகிர்ந்து கொள்வதை நாம் உறுதி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.







