ஷா ஆலம், மே 14: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள போக்குவரத்துச் செலவு, உரம் மற்றும் கால்நடைத் தீவனங்களின் விலை உயர்வு காரணமாக, இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என அரசாங்கம் கணித்துள்ளது.
தற்போது உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது, நாட்டின் கால்நடை மற்றும் மீன்பிடித் துறை உள்ளிட்ட ஒட்டுமொத்த உணவு விநியோகச் சங்கிலியில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவசாய மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.
குறிப்பாக, கோழித் தீவனங்களுக்கு அடிப்படையாக விளங்கும் சோளம் மற்றும் சோயா போன்ற தானியங்களின் விலை உயர்வு பெரும் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
'அக்ரோ பெஞ்ஜாஜா-ஐ' (Agro Penjaja-i) திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய சூழலில் அரசாங்கம் மெத்தனமாக இருக்க முடியாது என்றும், வரவிருக்கும் விலை மாற்றங்களை அமைச்சு மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் உறுதிப்படக் கூறினார்.
மலேசியா தனது கால்நடைத் தீவனங்களுக்கான தானியங்களுக்குப் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளையும், அரிசி விநியோகத்திற்குப் பாகிஸ்தான், இந்தியா மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளையும் பெரிதும் நம்பியுள்ளது.
தற்போது விநியோகத் தடைகள் ஏதும் இல்லை என்றாலும், எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து மற்றும் காப்பீட்டுச் செலவுகள் அதிகரிப்பது உரம் மற்றும் யூரியா போன்ற விவசாய இடுபொருட்களின் விலையைப் பாதிப்பதாக அவர் விளக்கினார்.
"எரிசக்தி நெருக்கடி ஏற்படும்போது, அதனுடன் தொடர்புடைய அனைத்து உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகளும் தவிர்க்க முடியாமல் பாதிக்கப்படும்," என்று குறிப்பிட்ட அமைச்சர், இத்தகைய சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.








