அம்பாங் ஜெயாவில் 7,000-க்கும் மேற்பட்ட வணிகர்கள் 'பிளாட்ஸ்' திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்

12 மே 2026, 2:14 AM
அம்பாங் ஜெயாவில் 7,000-க்கும் மேற்பட்ட வணிகர்கள் 'பிளாட்ஸ்' திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்

அம்பாங் ஜெயா, மே 12: சிலாங்கூர் மாநில அரசின் ‘பிளாட்ஸ்’ (PLATS) எனும் மின்னியல் வணிகத் தளம், அம்பாங் ஜெயா பகுதியில் உள்ள 7,000-க்கும் மேற்பட்ட சிறு வணிகர்களின் வருமானத்தைப் பெருக்குவதோடு, அவர்களின் வணிக முத்திரையை மேம்படுத்தவும் பெரும் உறுதுணையாக இருந்து வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு டிஜிட்டல்மயமாக்கல் முயற்சிகள் குறித்து அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் (MPAJ) துணைத் தலைவர் டி.எஸ். ஹஸ்ரோல்நிசாம் ஷாரி விளக்கமளித்துள்ளார்.

அம்பாங் ஜெயாவில் உள்ள சுமார் 7,300 வணிகர்கள் தற்போது இந்தத் தளத்தில் பதிவு செய்து தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சிறு வணிகர்களை வலுப்படுத்துவதற்காக மாநில அரசால் உருவாக்கப்பட்ட இந்த 'பிளாட்ஸ்' திட்டம், வணிகர்களுக்கு டிஜிட்டல் மயமாக்கல் குறித்த விழிப்புணர்வு, முறையான வணிக முத்திரை (Branding) மற்றும் பாதுகாப்பான இணையப் பயன்பாடு ஆகிய அம்சங்களில் சிறந்த பயிற்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.

உள்ளூர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வணிகக் குழுக்களுடன் இணைந்து இத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை நகராண்மைக் கழகம் முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

'தி கேம்பஸ் அம்பாங்' வளாகத்தில், மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (SKMM) ஏற்பாடு செய்திருந்த ‘பாதுகாப்பான இணையப் பயன்பாட்டு’ பிரச்சாரத் தொடக்க விழாவில் கலந்துகொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

எம்பிஐ அமைப்பின் ஒத்துழைப்போடு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சுமார் 80 தொழில்முனைவோர்கள் பங்கேற்று இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினைப் பெற்றனர். வணிகர்கள் இணையத்தைப் பயன்படுத்தும்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து இங்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதற்கிடையில், எதிர்வரும் ஹரிராயா ஹாஜி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக மற்றும் பருவகால வணிகர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளை நகராண்மைக் கழகம் திட்டமிட்டு வருவதாக ஹஸ்ரோல்நிசாம் தெரிவித்தார்.

இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், உணவு மையங்கள், வணிக வளாகங்கள், காலை மற்றும் இரவுச் சந்தைகள் மற்றும் நிரந்தர வணிகப் பகுதிகளில் தகுந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆர்வமுள்ள வணிகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் விரைவில் விரிவான தகவல்கள் வெளியிடப்படும் என்றும், இதன் மூலம் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.