உணவுக்கலை மூலம் சிலாங்கூரின் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும்

8 மே 2026, 9:08 AM
உணவுக்கலை மூலம் சிலாங்கூரின் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும்

ஷா ஆலம், மே 8 - சிலாங்கூர் மாநிலத்தின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கும் அதன் தனித்துவமான அடையாளத்தை வலுப்படுத்துவதற்கும் ஒரு முக்கிய ஊடகமாகப் பாரம்பரிய உணவுக்கலை (Gastronomy) திகழ்கிறது என்று மாநில கலாச்சாரத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா தெரிவித்துள்ளார்.

உணவுக்கலையை மேம்படுத்துவது என்பது வெறும் உணவை மட்டும் சார்ந்தது அல்ல என்றும், அது சமூகத்தின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் ஒரு பாரம்பரிய இணைப்புப் பாலம் என்றும் அவர் விளக்கினார்.

மாநிலத்தின் அதிவேக வளர்ச்சிக்கு மத்தியில், இத்தகைய பாரம்பரிய உணவுகள் காலப்போக்கில் மறைந்துவிடாமல் பாதுகாப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இது குறித்து மீடியா சிலாங்கூரிடம் பேசிய அவர், "உணவுக்கலை என்பது வெறும் உணவு மட்டுமல்ல, அது சிலாங்கூரின் அடையாள வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். இது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு கூடுதல் மதிப்பை வழங்குவதோடு, மக்களின் கலாச்சார உணர்வையும் மேம்படுத்துகிறது.

இந்தப் பாரம்பரிய உணவுகள் பாதுகாக்கப்பட்டு, சுற்றுலா மற்றும் பொருளாதாரத்துடன் இணைக்கப்படும்போது, அவை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதே மாநில அரசின் விருப்பம்," என்று கூறினார்.

அதே வேளையில், பாரம்பரிய உணவுகளின் நிலைத்தன்மையை உறுதி செய்ய அவற்றை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவது மிக முக்கியம் என்றும் போர்ஹான் சுட்டிக்காட்டினார்.

இளைஞர்கள் இந்தப் பாரம்பரியத்தின் வாரிசுகளாகச் செயல்பட வேண்டும் என்றும், பாரம்பரிய விழுமியங்களைச் சிதைக்காமல் புதிய அணுகுமுறைகளுடன் இந்த மரபைத் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

"பாரம்பரிய உணவுகளை அடையாளம் கண்டு அவற்றை மக்களிடையே பிரபலப்படுத்துவது மாநில அரசின் பொறுப்பாகும். இதற்காகத் திருவிழாக்கள் நடத்துவது மட்டுமின்றி, அந்த உணவுகளைத் தயாரிக்கும் முறைகள் குறித்தும் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

முன்னதாக நடத்தப்பட்டப் பயிற்சிப் பட்டறைகள் இத்தகைய பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு முயற்சியாகும். குடும்பத் தொழிலாகத் தொடரும் இத்தகைய உணவகங்களை இளைஞர்கள் முன்னெடுத்து நடத்துவதில் தவறில்லை; அதுவே நமது பாரம்பரியம் நிலைத்திருக்க உதவும்," என்றும் அவர் தனது பேட்டியில் தெளிவுபடுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.