பண்டுங்,ஜூலை 9 - வர்த்தகம், முதலீடு, வட்டாரத்துவ மேம்பாடு ஆகியவற்றில் மேலும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதின் மூலம், ஆசியான் அமைப்பின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாக சிலாங்கூரும் மேற்கு ஜாவாவும் விளங்க முடியுமென மெந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.
அவ்விரு வட்டாரமும் வலுவான பொருளாதார பலத்தைக் கொண்டிருப்பதாகவும்,ஆசியான் சந்தைக்கான நுழைவாயிலாகவும் அவ்விரு வட்டாரமும் திகழ முடியுமென, பண்டுங்கில் நடைபெறும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டினை தொடக்கி வைத்து உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர், மேற்கு ஜாவா இடையில் வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் மட்டும் ஒத்துழைப்பை அதிகரிப்பதோடு நிற்காமல், உணவுப் பாதுகாப்பு, தொழிற்துறை மேம்பாடு, நிபுணத்துவ பகிர்வு ஆகியவற்றிலும் அந்த ஒத்துழைப்பு விரிவுப்படுத்தப்பட வேண்டுமென அவர் கூறினார்.
தற்போதைய நிலைத்தன்மையற்ற உலக பொருளாதார சூழலில், அமைதி, நிலையான அரசியல், அணுக்கமான கலாச்சார உறவு ஆகியவற்றின் மூலம் ஆசியான் தனக்கென தனிச்சிறப்பினைக் கொண்டிருக்கிறது.
அதோடு, 700 மில்லியன் மக்கட் தொகையைக் கொண்ட ஆசியான் சந்தையை மேம்படுத்தி, வெளிநாட்டுச் சந்தையை அதிகம் நம்பியிருப்பதைக் குறைக்க முடியுமெனவும் மெந்திரி பெசார் தெரிவித்தார்.







