மானியமற்ற RON95 மற்றும் டீசல் விலை உயர்வு

7 மே 2026, 4:11 AM
மானியமற்ற RON95 மற்றும் டீசல் விலை உயர்வு

கோலாலம்பூர், மே 6: எதிர்வரும் மே 7 முதல் மே 13 வரையிலான ஒரு வார காலத்திற்கு, மானியமற்ற RON95 பெட்ரோல் மற்றும் தீபகற்ப மலேசியாவிற்கான டீசல் விலை லிட்டருக்கு 5 சென்கள் உயர்த்தப்படுவதாக நிதி அமைச்சகம் (MOF) இன்று அறிவித்துள்ளது.

இந்த விலை மாற்றத்தின் அடிப்படையில், மானியமற்ற RON95 பெட்ரோல் லிட்டருக்கு 4.02 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இதன் விலை 3.97 ரிங்கிட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை கடந்த வாரமிருந்த 5.12 ரிங்கிட்டிலிருந்து தற்போது 5.17 ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது. எனினும், RON97 பெட்ரோலின் விலை எவ்வித மாற்றமுமின்றி லிட்டருக்கு 4.90 ரிங்கிட்டாகவே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட சில துறைகளுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானிய விலையை அரசாங்கம் மாற்றமின்றித் தொடர்ந்து தக்கவைத்துள்ளது.

இதன் அடிப்படையில், தகுதி வாய்ந்தவர்களுக்கான RON95 (BUDI95) பெட்ரோல் லிட்டருக்கு 1.99 ரிங்கிட்டாகவும், சபா, சரவாக் மற்றும் லாபுவான் பகுதிகளில் டீசல் விலை 2.15 ரிங்கிட்டாகவும் நீடிக்கிறது.

மேலும், மானிய விலை பெட்ரோல் கட்டுப்பாட்டு திட்டத்தின் (SKPS) கீழ் 2.05 ரிங்கிட்டாகவும், மானிய விலை டீசல் கட்டுப்பாட்டு திட்டத்தின் (SKDS) கீழ் 2.15 ரிங்கிட்டாகவும் விலைகள் மாற்றமின்றி அமலில் இருக்கும்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் மோதல்கள் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலருக்கும் அதிகமாகவே நீடித்து வருவதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாது என்று நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

குறிப்பாக, அந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான சேதங்கள், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளன.

தானியங்கி விலை நிர்ணய முறையின் (APM) அடிப்படையில் இந்த வாராந்திர விலை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் எரிபொருள் விநியோக நிலைத்தன்மையைப் பேணிக்காக்க, பொதுமக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மடாணி அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.