ஷா ஆலம், மே 5: மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில், 'ரஹ்மா மடாணி விற்பனைத் திட்டம்' (PJRM) இந்த ஆண்டு நாடு முழுவதும் 30,000 இடங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை, சந்தை விலையை விட 30 விழுக்காடு வரை குறைவாக இருக்கும் என்பது பொதுமக்களுக்குக் கிடைத்துள்ள நற்செய்தியாகும்.
இன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் (DUN) வாரந்தோறும் இந்த மலிவு விலை விற்பனை நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றார்.
கடந்த 2025-ஆம் ஆண்டில் 25,000-க்கும் மேற்பட்ட இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், 2026-ஆம் ஆண்டில் இதனை 30,000 இடங்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் இந்தச் சலுகை சென்றடைவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) முன்னெடுத்துள்ள இத்திட்டம், நகர்ப்புறங்களைத் தாண்டி கிராமப்புறங்கள் மற்றும் உட்புறக் கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்படும். குறிப்பாக, இந்த விற்பனைத் திட்டத்தில் பெரிய நிறுவனங்களுக்குப் பதிலாகச் சிறு வணிகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் திட்டத்தின் பலன்கள் பரவலாக்கப்பட்டு, அடிமட்ட வணிகர்களும் பயனடைய வழிவகை செய்யப்படும்.
மக்களின் தற்போதைய பொருளாதாரச் சுமையைக் குறைப்பதே இந்த அதிரடி நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்ட அன்வார் இப்ராஹிம், இது அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உடனடித் தீர்வாக இல்லாவிட்டாலும், சாமானிய மக்களின் அழுத்தத்தைச் சற்றே குறைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கான புதிய அணுகுமுறைகளை வாராந்திர அமைச்சரவைக் கூட்டங்களில் அரசு தொடர்ந்து ஆராயும் என்றும் அவர் உறுதியளித்தார்.








