ஷா ஆலம், டிச 15: உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவுத் துறை அமைச்சகம் (KPDN), 2026ஆம் ஆண்டுக்கான மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் மடாணி ரஹ்மா விற்பனை திட்டத்தை (Program Jualan Rahmah Madani – PJRM) நடத்த உள்ளது.
இந்த திட்டம் நாடு முழுவதும் மொத்தம் 269 தொடர்களாக, எதிர்வரும் டிசம்பர் 20 முதல் ஜனவரி 11 வரை நடைபெறும்.
இந்த திட்டத்தில் 174 சூப்பர் மார்க்கெட்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் ஆடை கடைகள் பங்கேற்கின்றன என KPDN அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி கூறினார். இத்திட்டம் கடைகளுக்குள் மற்றும் வெளிப்புற வளாகங்களிலும் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
“இந்த பள்ளி விடுமுறை காலத்தில், பள்ளி மாணவர்களுக்கு தேவையான பொருட்களை 10 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடியில் பெறலாம். இதில் பள்ளி சீருடைகள், காலணிகள், பள்ளிப்பைகள் மற்றும் எழுத்துப்பொருட்கள் அடங்கும். ஒவ்வொரு இடத்திலும் 45 முதல் 80 வரை ஸ்டாக் கீப்பிங் யூனிட்கள் (SKU) வழங்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு நடைபெறும் தேதிகள் மற்றும் இடங்களை அறிய, பொதுமக்கள் PJRM நாட்காட்டியை https://www.kpdn.gov.my/ms/jualan-rahmah என்ற இணைப்பில் சரிப்பார்க்கலாம்.
மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், PJRM உட்பட Payung RAHMAH திட்டத்திற்காக மடாணி அரசு RM300 மில்லியன் ஒதுக்கியுள்ளதாகவும், செயல்முறை மேம்பாடுகள் மற்றும் இலக்கு குழுக்களை விரிவுபடுத்துவதன் மூலம் இந்த திட்டத்தை KPDN தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் ஆர்மிசான் கூறினார்.


