மடாணி ரஹ்மா மலிவு விற்பனையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

19 ஜூலை 2026, 7:48 AM
மடாணி ரஹ்மா மலிவு விற்பனையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

லாபுவான், ஜூலை 19: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், ‘மடாணி ரஹ்மா மலிவு விற்பனைத் திட்டம்’ (PJRM) இனி வரும் காலங்களில் இன்னும் அடிக்கடி நடத்தப்படும் என்று உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி தெரிவித்துள்ளார்.

சந்தை விலையை விட 10 முதல் 30 விழுக்காடு வரை குறைவான விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் இத்திட்டம், தற்போது நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மாதத்திற்கு ஒன்பது முறை நடத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும் வட்டாரங்களில், உள்ளூர் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இந்த விற்பனையின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபாவிலிருந்து லாபுவான் தீவிற்குப் பொருட்களைக் கொண்டு வருதவற்கான போக்குவரத்துச் செலவு அதிகமாக இருப்பதால், இங்கு நுகர்வோர் பொருட்களின் விலை பொதுவாகவே சற்று அதிகமாக இருப்பதை தங்களது அமைச்சகம் உணர்ந்துள்ளதாகக் கூறினார்.

எனவே, இந்த அதிகப்படியான போக்குவரத்துச் செலவினால் லாபுவான் மக்கள் எதிர்கொள்ளும் சுமையைக் குறைக்க ஏதுவான மிகச் சரியான வழிமுறைகளை அமைச்சகம் ஆராயும் என்று அவர் உறுதியளித்தார்.

இதேபோன்ற சவாலை சரவாக்கின் லிம்பாங் பகுதி மக்களும் எதிர்கொண்டு வருவதாகவும், இதற்கு நிதியமைச்சின் ஒத்துழைப்போடு நீண்ட காலத் தீர்வைக் காண ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் விவரித்தார்.

இருப்பினும், இந்த ரஹ்மா மலிவு விற்பனைத் திட்டம் அடிக்கடி நடத்தப்பட்டால் தங்களின் தினசரி வருமானம் பாதிக்கப்படும் என்று உள்ளூர் மளிகைக் கடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளதையும் அமைச்சகம் கருத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.

எனவே, நுகர்வோருக்குக் குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், அதே வேளையில் உள்ளூர் சில்லறை வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, இத்திட்டம் நடத்தப்படும் இடங்களும் அதன் எண்ணிக்கையும் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

பொதுமக்கள் இந்த மலிவு விற்பனை நடைபெறும் அட்டவணையை உள்நாட்டு வணிக அமைச்சின் (KPDN) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள 'மடாணி ரஹ்மா மலிவு விற்பனை நாட்காட்டி' மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.