கோலாலம்பூர், மே 5: மலேசியாவில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வர்த்தகக் குற்றச் செயல்கள் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 12.89 விழுக்காடு அதிகரித்துள்ளதாகப் புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை (CCID) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 57,260 புகார்கள் பதிவான நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 64,643-ஆக உயர்ந்துள்ளது என அத்துறையின் இயக்குநர் டத்தோ ருஷ்டி முகமது இசா இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், இக்குற்றங்களால் ஏற்பட்ட ஒட்டுமொத்த நிதி இழப்பு 2.8 விழுக்காடு சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு 787 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த இழப்பீடு, இந்த ஆண்டு 764 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைந்துள்ளது.
அதே வேளையில், "குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையைப் பொறுத்தவரை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் எண்ணிக்கை 13.59 விழுக்காடு அதிகரித்துள்ளது; அதாவது, கடந்த காலங்களில் 4,525-ஆக இருந்த வழக்குகளின் எண்ணிக்கை தற்போது 5,140-ஆக உயர்ந்துள்ளது என்று அவர் இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்."
நடப்பு ஆண்டில் பதிவான வர்த்தகக் குற்றங்களில் 'ஆன்லைன்' எனப்படும் இணைய வழி மோசடிகளே 87.74 விழுக்காடு பங்கினை வகிக்கின்றன. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 16,880 இணைய மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதன் மூலம் பொதுமக்கள் சுமார் 555.7 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளனர். இதில் தொலைத்தொடர்பு சார்ந்த குற்றங்களே முதலிடத்தில் உள்ளன. அதனைத் தொடர்ந்து மின்-வணிக மோசடிகள், இல்லாத முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் போலி கடன் திட்டங்கள் போன்றவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
குறிப்பாக, போலி முதலீட்டு மோசடிகளால் மட்டும் பொதுமக்கள் 246.7 மில்லியன் ரிங்கிட்டைப் பறி கொடுத்துள்ளனர். இது தவிர, மின்-நிதி சார்ந்த குற்றங்கள் மற்றும் 'லவ் ஸ்கேம்' எனப்படும் காதல் மோசடிகளும் குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகியுள்ளன.
வர்த்தகக் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறையினரின் கைது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு முதல் காலாண்டில் மட்டும் 7,190 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டத்தோ ருஷ்டி முகமது இசா மேலும் தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்களின் நிதி பரிமாற்றங்களில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அவர் மீண்டும் வலியுறுத்தினார்.







